கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா..? | MG SILVERSTAR SIBI VINNARASAN
  • கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா..?

    கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா..?

           1987ம் ஆண்டு வீடற்றவர்களுக்கான சர்வதேச ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டது. பாலு மகேந்திரா 1988-ல் வீடு படத்தை எடுத்து வெளியிட்டார். வீடற்றவர்கள் என்றால் நம் மனத்தில் நரிக்குறவர்கள் போன்ற நாடோடிகளும், பெரு நகரங்களில், சேரிகளில் வசிக்கும் நபர்களும், பிளாட்ஃபாரத்தில் வசிக்கும் நபர்களும், அகதிகளும்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால், பாலு மகேந்திராவோ ஒரு மத்திய வர்க்கக் குடும்பத்தின் வேதனைகளை மையமாக வைத்து படமெடுத்திருக்கிறார். 

             நிச்சயம் இந்த அனுபவமும் படமாக்கத் தகுந்ததுதான். எல்லா மத்திய தர குடும்பத்து நபர்களுக்கும் சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்ற கனவு இருக்கத்தான் செய்யும். ஆனால், கலை என்று வரும்போது வேறு சில அடிப்படைகள் தேவைப்படும். முதலில் சொந்த வீடு என்பது ஆடம்பரத் தேவையாக, ஒரு கனவாக மட்டுமே இருந்தால் போதாது. மிகவும் தேவையான ஒன்றாக கதைக்குள் நிலை நிறுத்தப்பட்டாக வேண்டும்.

              எல்லாருக்குமே வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டுமென்ற கனவு இருக்கத்தான் செய்யும். ஆனால், மேல் சாதியினரால் எள்ளி நகையாடப்பட்ட ஒரு தலித்துக்கு அதே கிராமத்தில் அவர்கள் முன்னால் தலை நிமிர்ந்து நடந்தாக வேண்டும் என்ற லட்சியம் இருப்பதாகக் காட்டினால் அந்த இலக்குக்குக் கூடுதல் கனம் கிடைக்கும். யாருடைய சைக்கிள் காணாமல் போனாலும் வேதனைதான். ஆனாலும் சைக்கிள் இருந்தால்தான் ஒரு வேலை கிடைக்கும்; வேலை கிடைத்தால்தான் குடும்பம் அரைப்பட்டினியோடாவது வாழ்க்கையை ஓட்ட முடியும் என்று இருக்கும் ஒருவனுடைய சைக்கிள் காணாமல் போனால் அந்த வேதனை பல மடங்கு அதிகரித்துவிடும். கலைஞன் என்பவன் தனது கதையின் தேவையை, கதாநாயகனின் இலக்கை அப்படி மிகவும் அவசியமானதாக கதைக்குள் நிலை நிறுத்த வேண்டும். பாலு மகேந்திராவோ அதை மிகவும் மேலோட்டமாகச் செய்திருக்கிறார்.

             கதையின் படி அந்த மத்திய தரக்குடும்பம் நீண்ட நாள் வசித்து வந்த வாடகை வீட்டில் இருந்து வெளியேற நேருகிறது. வேறு வாடகை வீடு தேடி அலைகிறார்கள். கிடைக்காமல் போகவே சொந்த வீடு கட்டத் தீர்மானிக்கிறார்கள். அப்படியாக இந்தக் கதையில் சொந்த வீடு மிகவும் தேவை என்ற அழுத்தம் கதையில் தரப்படவில்லை. அதோடு வாடகை வீடு தேடும் காட்சிகளும் மிகவும் மேலோட்டமாக இருக்கின்றன. வீடு வீடாக ஏறி இறங்குகிறார்கள். அவ்வளவுதான். அதிலும் அவர்கள் பார்க்கும் ஒரே வீட்டின் உரிமையாளரான பிராமணர் நான் வெஜ் எல்லாம் சமைச்சுக்கலாம் என்று படு மாடர்னாக இருக்கிறார். இளையராஜா, நத்திங் பட் விண்ட் என்ற இசை ஆல்பத்துக்குப் போட்ட இசையைப் பின்னணியில் ஓட விடுவதன் மூலம் மட்டுமே வீடு தேடுவதில் இருக்கும் வேதனையை உணர்த்த பாலுவால் முடிகிறது.

             உண்மையில் நாலைந்து வருடங்களில் ஐந்தாறு வீடுகள் மாற வேண்டிவந்துவிட்டது. வீட்டு உரிமையாளர்களுடன் ஏதாவது பிரச்னைகள் வந்து கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு தடவையும் வீட்டை மாற்றிக் கொண்டு செல்ல நிறைய செலவாகிறது. வீடு தேடி அலைவதிலும் பெரும் சிக்கல் இருக்கிறது. இவையெல்லாவற்றுக்கும் மேலாக குழந்தையை ஒவ்வொரு பள்ளியாக மாற்ற வேண்டி வருகிறது. அது குழந்தையின் படிப்புக்கும் மனதுக்கும் பெரும் கெடுதலை உருவாக்குகிறது. சொந்த வீடு இருந்தால் இந்தத் தொந்தரவே இருக்காது என்று சொந்த வீட்டின் தேவையானது கதைக்குள் நிலைநிறுத்தப்பட்டிருக்கவேண்டும்.

              அடுத்ததாக அந்த மத்திய தர குடும்பமோ இரண்டு கிரவுண்ட் நிலத்துக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறது. அதில் ஒரு கிரவுண்டை விற்றால் 30 ஆயிரம் ரூபாய்தான் கிடைக்கிறது. வீடு கட்டவோ 1.5 லட்சம் தேவைப்படுகிறது. இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வருகிறது. 25 வருடத்துக்கு முன்னால் கிரவுண்டின் விலை 30 ஆயிரமாக இருந்தபோது வீடு கட்ட மட்டும் 1.5 லட்சம் தேவைப்படுமா? சிட்டி லிமிட்டுக்குள் இருக்கும் நிலத்தின் விலை என்னவோ வீடு கட்ட அதைவிடக் குறைவாக ஆகும் என்பதுதானே உண்மை.

             அதோடு, உண்மையில் காருக்கு பெட்ரோல் போட முடியாமல் தவிக்கும் ஒருவரின் வேதனையும் நிஜமானதுதான். ஆனால், அலுவலகத்துக்குப் போக ஒரு சைக்கிள் கூட இல்லாதவரின் வேதனையானது அதைவிட வலுவானது. அதிலும் தொலை தூரப் பள்ளிக்கூடத்துக்குப் போக சைக்கிள் தேவைப்படும் குழந்தையின் வேதனை என்பது வாகனம் சார்ந்த கதையின் அழுத்தமான கருவாக இருக்கும். பாலு மகேந்திராவோ மேலோட்டமான நபர்களுக்கான மேலோட்டமான தேவை என்ற அடிப்படையில் கதையைக் கொண்டு செல்கிறார். சொந்த வீடு தேவை என்ற கனவுடன் இருக்கும் மத்தியதரகுடும்பங்கள் வலிந்து தமது அனுபவங்களை இந்தப் படத்துடன் பொருத்திக்கொண்டு ரசித்தாக வேண்டியிருக்கிறது. தமிழர்கள் அதில் கில்லாடிகள். ஒரு கதாபாத்திரம் நகைச்சுவையாக எதையாவது செய்து இவர்களைச் சிரிக்க வைக்க வேண்டிய அவசியமே இல்லை. காமெடியர்கள் திரையில் வந்தாலே போதும், இவர்கள் சிரித்துவிடுவார்கள்.

             மத்திய வர்க்கக் குடும்பம் ஒரு கிரவுண்டை விற்று இன்னொரு கிரவுண்டில் வீடு கட்டத் தீர்மானிக்கிறார்கள். அலுவலகத்தில் இருந்து கடன் வேறு வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், படத்தின் கடைசியில் வீடு கட்டிய இடம் மெட்ரோ வாட்டர் நிறுவனத்தால் ஒருவருடத்துக்கு முன்பே ஏடுத்துக்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒரு கிரவுண்ட் நிலத்தை விற்கும்போது அது தெரிய வந்திருக்குமே… மெட்ரோ வாட்டர் எடுத்துக்கொண்ட நிலத்துக்கு கம்பெனி எப்படிக் கடன் கொடுத்தது? அரசாங்கம் திடீரென்று ஒரு இடத்தை எடுத்துக்கொண்டால் வங்கியால் எதுவும் செய்ய முடியாது. ஆனால், ஏற்கெனவே அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு எந்த நிறுவனமும் கடன் தராது.

             அதுபோல் படத்தில் வரும் வயதான கதாபாத்திரத்தைச் சாகடிப்பதன் மூலம் படத்துக்கு கனத்தைச் செயற்கையாகக் கூட்டுகிறார் (அழியாத கோலங்கள் என்ற இளம் பருவ விடலைத்தனங்களைப் பற்றிய படத்தில்கூட ஒரு கதாபாத்திரத்தைச் சாகடித்துத்தான் கனம் கூட்ட இவரால் முடிந்திருந்தது).

               இது இப்படியென்றால், கதாநாயகியின் காதலராக ஒருவர் இந்தப் படத்திலும் வருகிறார். திருமணம் செய்துகொள்ளாமலேயே அவர்கள் வெகு சகஜமாக எல்லா இடங்களுக்கும் போய்வருகிறார்கள். 1980களில் என்ன… இன்றைய 2014களில் கூட மத்திய வர்க்க குடும்பத்தில் இப்படியான ஒரு சுதந்தரத்தைப் பார்க்க முடியாது. அப்படியே இருவருக்கும் பிடித்திருந்தால் உடனே திருமணம் செய்துவைத்துவிடுவார்கள். பாலு மகேந்திரா தனது கதை மாந்தர்களை மிகவும் நல்லவர்களாகச் சித்திரிக்க விரும்பியதில் தவறில்லை. அவர்கள் தமிழ்ச் சூழலில் காலூன்றியவர்களாகவும் இருக்கவேண்டுமே (சந்தியா ராகம் படத்திலும் அப்படித்தான். அந்த முதியவர் கிராமத்தில் குழந்தை போல் விளையாடி மகிழ்பவராக இருக்கிறார். மனைவி இறந்ததும் நகருக்கு வருபவர் மருமகளின் வீட்டில் சிறிய மஸ்தாபம் ஏற்பட்டதும் நேராக முதியோர் இல்லத்துக்குப் போய்விடுகிறார். 

              இளைய தலைமுறை தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை புறக்கணித்துவிட்டு, சுய நலத்துடன் காசு, பணம் என்று அலைவதையும், முதியவர்கள் அதனால் அனுபவிக்க நேரும் துயரத்தையும் சித்திரிக்காமல், அரிதிலும் அரிதாக இருக்கும் முதியவர் ஒருவரை வைத்து ஒரு படத்தையே எடுத்துமுடித்துவிடுகிறார். இலங்கைப் பிரச்னையைப் பற்றி இவர் படமெடுத்திருந்தால், ஒற்றைத்தலைவலியால் எப்போதாவது கஷ்டப்படும் ஒருவரின் வாழ்க்கை அனுபவங்களையும் ஊரடங்கு உத்தரவால் மருத்துவமனைகள் மூடப்பட்டிருக்க அவராகவே வீட்டில் சுக்குக் கஷாயம் வைத்துக் குடித்ததும் நோய் நீங்கிக் குணமடைவதுபற்றியும் எடுத்து முடித்திருப்பார் போலிருக்கிறது!)

              இவையெல்லாம் படத்தின் அடிப்படையான குழறுபடிகள். இதை அவரால் தவிர்க்க முடியவில்லை. இதற்கான காரணம் என்னவென்றால், பாலுவின் ‘கலை’ மனமானது வணிக சினிமாக்களின் எதிர் பிம்பம் மட்டுமே. வணிக சினிமாக்களில் இருக்கும் குறைகள் எதுவும் அவர் படத்தில் இருக்காது. ஆனால், அது கலை அம்சம் கொண்டதாகவும் இருக்காது. கலை என்பது வேறு வகை உலகம். அது பாலுவால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடிந்திராதது. ஆனால், ஒரே பாடலில் கோடீஸ்வரராவதை வாய் பிளந்தபடியே பார்த்துப் பழகிய தமிழ் மகா ஜனங்கள், படம் முழுக்கப் பாடுபட்டு ஒரு வீட்டைக் கட்டுகிறார்கள் என்று நிறுத்தி நிதானமாகக் காட்டியதும் இதுதான் கலை போலிருக்கிறது என்று அதே வாயை மூடாமலேயே மீண்டும் மெய் மறந்து நிற்கிறார்கள். விமர்சனத் திலகங்களோ தங்களுடைய தமிழகக் கனவுத் தொழிற்சாலை நோக்கிய பயணத்துக்கான தக்கைப் பாலம் ஒன்றை இதன் மூலம் பாடுபட்டு உருவாக்கி மகிழ்ந்துகொள்கிறார்கள்.

            சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படம் பார்த்திருப்பீர்கள். ஷூ வாங்க கஷ்டப்படும் ஏழைக் குடும்பத்துச் சிறுவனின் கதை. பள்ளியில் படிக்கும் அண்ணனும் தங்கையும் ஒரே ஷூவை வைத்துக்கொண்டு படும் சிரமங்கள் எளிமையாக அதே சமயம் மனதை உருக்கும் வகையில் சொல்லப்பட்டிருக்கும். அந்த ஊரில் ஒரு ஓட்டப் பந்தயம் நடக்கப் போவதாக அறிவிப்பு வரும். பந்தயத்தில் மூன்றாவதாக வருபவருக்கு ஷூக்கள் பரிசு. அந்தச் சிறுவன் முதலிடம் வெல்லும் வாய்ப்பு இருந்தும் மெதுவாக ஓடி மூன்றாமிடத்துக்கு வர முயற்சி செய்வான். ஆனால், கடைசி கட்டத்தில் எப்படியோ அவனே முதலிடத்தை வென்றுவிட அதற்கான பரிசு கிடைக்கும். அவனோ ஷூ கிடைக்காத சோகத்தில் புண்ணாகிப் போன தன் கால்களை வீட்டு முற்றத்தில் அமர்ந்து நீரில் நனைத்தபடியே சோகமாகப் பார்த்துக்கொண்டிருப்பான். அந்தச் சிறுவனின் அப்பா கடைத்தெருவில் பொருட்கள் வாங்கிக்கொண்டு சைக்கிளில் வீடு திரும்புவார். அவருடைய சைக்கிள் கேரியரில் பல பொருட்களுக்கு நடுவில் சிறியதாக ஒரு ஜோடி ஷூக்கள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். படம் அதோடு முடிவடையும்.

              ஒரு கலைப்படத்துக்கான க்ளைமாக்ஸ் இதுவாகத்தான் இருக்க முடியும். பாலு மகேந்திரா இதே படத்தை எடுத்திருந்தால், அப்பா ஷூ வாங்கிக் கொண்டுவருவார்; அந்தச் சிறுவனோ விபத்தில் சிக்கி நொண்டியாகிவிட்டிருப்பான். இதுவும் சோகமான முடிவுதான். ஆனால், இப்படியான செயற்கையான அதிரடி நிகழ்வுகள் கலைக்கு எதிரானவை.

                உண்மையில் இரானிய இயக்குநர் வீடு படத்தை எடுத்திருந்தால் எப்படி எடுத்திருப்பார் என்று பார்ப்போம். அன்பானவராக இருந்த தனது தாய் வீடு கட்ட ஆரம்பித்த பிறகு அதன் நெருக்கடிகளால் வேறு நபராக ஆகிவிட்டார் என்று ஒரு பேட்டியில் பாலு மகேந்திரா தெரிவித்திருந்தார். உண்மையில் இதைத்தான் இரானிய இயக்குநர் கதையின் மையமாகக் கொண்டுவந்திருப்பார்.

             வாடகை வீட்டில் இருந்தபோது நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் அன்பாக அன்னியோன்னியமாக இருந்த ஒருவர் சொந்தமாக வீடு கட்ட ஆரம்பித்ததும் மெள்ள மெள்ள மாறிப் போயிடுகிறார். சொந்தக்காரர்களின் வீட்டு விழாக்களுக்குப் போகாமல் இருக்கிறார். வீட்டுக்கு வரும் நண்பர்களைச் சரியாகக் கவனிக்காமல் வீட்டு வேலைகளைப் பார்க்கப் போய்விடுகிறார். உறவினர் ஒருவருக்கு உடல் நிலை மோசமாகிறது. கையில் பணம் இருக்கும் நிலையிலும் வீடு கட்டத் தேவை என்று சொல்லி தரமறுத்துவிடுகிறார். வாடகை வீட்டில் இருந்த காலத்தில் யார் கடன் கேட்டாலும் வேறு இடத்தில் வாங்கியாவது உதவி செய்திருந்தவர் இப்போது இப்படி மாறிவிட்டார். குழந்தைகளோடு சிரித்துப் பேசுவது அறவே நின்றுவிடுகிறது.

              அவருடைய வாடகை வீட்டில் குருவிகளும் காகங்களும் நீர் அருந்த சிறிய பாத்திரத்தில் நீர் வைத்திருப்பார். பசு மாட்டுக்கு வீட்டு வாசலில் ஒரு பெரிய தொட்டி கட்டி கழணித் தண்ணியை தினமும் ஊற்றி வந்திருப்பார். ஆனால் அவரே, தனது நிலத்தில் அது நாள் வரை மேய்ந்து வந்த பசு மாடு வீடு கட்ட ஆரம்பித்த பிறகும் ஏக்கத்துடன் வந்து நிற்பதைப் பார்த்து அடித்து விரட்டுவார். அவருடைய நிலத்தில் பலருக்கும் நிழல் தரும்படி இருந்த மரம் ஒன்றை சிறிதும் தயக்கமில்லாமல் வெட்டி எறிவார்.

              இப்படியாக சொந்த வீடு என்ற ஒன்று ஒருவருடைய மனத்தில் இருக்கும் ஈரத்தை படிப்படியாக உறிஞ்சிவிடுகிறது. எல்லா கஷ்டங்களும் பட்டு வீட்டைக் கட்டி முடிக்கிறார். சொந்த வீட்டின் ஒவ்வொரு அறையாக நடந்துசென்று பார்க்கிறார். வாடகை வீட்டில் இருந்தபோது இருந்த குதூகலங்கள் எதுவுமில்லாமல் வீடு இருளடைந்து காணப்படுகிறது.

           வீடுங்கறது வெறும் செங்கல்லும் சிமெண்டும் இல்லை. சொந்த பந்தங்கள் வந்துபோனால்தானே அது வீடு என்ற உண்மை அவருக்கு உறைக்கிறது. கண்களில் நீர் கசிய ஜன்னல் வழியாக தெருவைப் பார்க்கிறார். ஒரு பசு மாடு கன்றுடன் உணவு தேடி அலைந்து கொண்டிருக்கிறது. மளமளவென கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, வீட்டில் இருக்கும் இரண்டு பெரிய வாளிகளைத் தூக்கிக் கொண்டு வாசலில் வைத்து ஒன்றில் தண்ணீரும் இன்னொன்றில் வீட்டில் இருக்கும் சாப்பாடும் போட்டு வைக்கிறார். சிறிது நேரத்தில் வீட்டைக் கடந்து சென்ற பசு மாடு கன்றுடன் திரும்பி வருகிறது. ஆசை ஆசையாக உணவைச் சாப்பிட்டுவிட்டு தண்ணீரைக் குடித்துவிட்டுச் செல்கிறது. இப்போதும் அந்தப் பெண்ணின் கண்ணில் இருந்து கண்ணீர் வழிகிறது. ஆனால், இது வேறு கண்ணீர்.

        இடையிடையே ஊர் முழுவதும் வீடுகட்டித்தரும் கூலித் தொழிலாளர்கள் தமக்கென ஒரு குடிசைகூட இல்லாமல் படும் துயரம் (விவசாயம் பொய்த்ததால் கட்டட வேலைக்கு வந்த தலைமுறையின் பிரதிநிதிகள்), பக்கத்திலேயே கோடீஸ்வரன் ஒருவன் தன் வீட்டில் நீச்சல் குளம் கட்டிக்கொள்ளும் ஆடம்பரம், அல்லது ஊட்டியில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை தங்கிக் கொள்ள ஒரு பங்களா கட்டும் ஆடம்பரம், நாடோடிகளின் திறந்தவெளி வாழ்க்கை என அனைத்தும் போகிற போக்கில் தொட்டுக் காட்டப்படும்.

           ஒரு கலைப் படைப்பென்றால் இப்படியான தரிசனத்தைக் கொண்டதாக இருக்கவேண்டும். மெட்ரோ வாட்டர் நிறுவனம் வீட்டை ஆக்கிரமிப்பதென்பது மிகையான வணிக சினிமா க்ளைமாக்ஸ். உண்மையில் அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு என்பது பல குடும்பங்களை ஒரே நேரத்தில் நடுத்தெருவில் கொண்டு வருவதாகத்தான் இருக்கும். ஒரு குடும்பத்தின் ஒரு கிரவுண்ட் நிலத்தையெல்லாம் குறிவைப்பது அரசாங்க ராட்சஸனின் பிரமாண்டத்தைப் புரிந்து கொள்ளாததால் வந்த விளைவு.

             இத்தகைய அடிப்படைக் குழறுபடிகள் இருந்த பிறகும் வீடு பொருட்படுத்தத்தகுந்த படமே. பாலு மகேந்திரா கவனத்தில் கொள்ளவேண்டிய இயக்குநரே. கதாநாயகியை திரையில் கவுரவமாக நடத்தியது, அசட்டு நகைச்சுவையைத் திணிக்காதது, அபத்த ஆட்டம் பாட்டங்கள் இல்லாதது, க்ளைமாக்ஸ் நீங்கலாக படம் முழுவதும் இயல்பான சம்பவங்களைக் காட்சிப்படுத்தியது என பல நல்ல அம்சங்கள் அவரிடமும் அவருடைய ஒருசில படங்களிலும் உண்டு. அவருடைய சிஷ்ய கோடிகளைப் போன்று மனபிறழ்வுகள் திரையிலும் வெளிப்படும் அளவுக்கு அவர் ஒருபோதும் மாறிவிடவில்லை.

          அதோடு, ஈழப் போரின் முதல் வெடிகுண்டை வீசியதே பாலுமகேந்திராதான் என்று தமிழ் தேசியக் கண்மணிகள் புதூசாகக் கண்டுபிடித்துச் சொல்ல ஆரம்பித்திருக்கும் நிலையில், பாலுமகேந்திராவின் தலையில் இருந்து உதிர்ந்த ஒற்றை ரோமத்தைக்கூட தங்களுடைய வெறுப்பு அரசியலுக்கு அவர்களால் ஆதரவாகக் காட்டிவிடமுடியாது. தமிழர்கள் இந்துக்களே அல்ல என்று சொல்லிக்கொண்டு புதிய சித்தாந்தங்களை உருவாக்க முனையும் அந்தக் கூட்டத்தைவிட, அரசியல் நிதானமும் மனிதாபிமான அணுகுமுறையும் கொண்டவர்தான் பாலுமகேந்திரா. இலங்கை வேர்கள் கொண்டிருந்த நிலையிலும் ஈழப் பிரச்னை பற்றி ஏன் படமெடுக்கவில்லை என்று யாரோ கேட்டபோது, புலிகளின் தவறுகளையும் சொல்லாமல் என்னால் படமெடுக்கமுடியாதே என்று சொன்னவர் அவர். பெஞ்சமின் பாலுவாக இருந்த நிலையிலும் இந்த அரசியல் தெளிவு அவருக்கு இருந்தது மிகவும் ஆச்சரியமே. இந்த அரசியல் நிதானம் அவருடைய கலை ஊற்றை இன்னும் கொஞ்சம் ஆழப்படுத்தியிருக்கலாம்…..


0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Sign Out