600 படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்த நடிகர் பிரேம் நசீர் | MG SILVERSTAR SIBI VINNARASAN
  • 600 படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்த நடிகர் பிரேம் நசீர்



               பல தமிழ்ப் படங்களில் நடித்த மலையாள நடிகர் பிரேம் நசீர், மொத்தம் 600 படங்களில் கதாநாயகனாக நடித்து சாதனை படைத்தார். இது அகில உலகிலும் யாரும் செய்யாத சாதனை என்று, "கின்னஸ்" புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

                மலையாளப் பட உலகில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் நடிகர் பிரேம் நசீர். பிரேம் நசீர் தனது உணர்ச்சி பூர்வ நடிப்பால் ரசிகர்கள் உள்ளத்தை கவர்ந்தவர். தமிழ்ப் படங்களிலும் நடித்து பிரபலமானவர். தமிழில் 30 படங்களிலும், 600-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களிலும் பிரேம் நசீர் நடித்தார்.

             600 படங்களில் கதாநாயகனாக நடித்த முதல் நடிகர் என்ற முறையில் பிரேம் நசீர் "கின்னஸ்" சாதனை படைத்தார். பிரேம்நசீர், ஏ.கே.வேலன் தயாரித்த "தைப்பிறந்தால் வழி பிறக்கும்" என்ற படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகில் அறிமுகமானார். எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் பிரேம் நசீர், ராஜசுலோசனா, எம்.என்.ராஜம் நடித்தார்கள். இது 100 நாள் வெற்றிப்படம். அந்த படத்தைத் தொடர்ந்து பிரேம்நசீர்- சவுகார் ஜானகி நடித்த "நல்ல இடத்து சம்பந்தம்" பிரேம்நசீர்- பண்டரிபாய் நடித்த "நான் வளர்த்த தங்கை" மற்றும் "பெரிய கோவில்" (இதில் எம்.என்.ராஜம், சந்திரகாந்தா நடித்துள்ளனர்) படங்கள் வெளிவந்தன.

                1959, 1960-ம் ஆண்டுகளிலும் பிரேம் நசீர் நான்கு, ஐந்து தமிழ்ப் படங்களில் தோன்றினார். அதில் குறிப்பிடத்தக்கவைகளில் ஒன்று எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் மீண்டும் சேர்ந்து நடித்த "கல்யாணிக்கு கல்யாணம்" என்ற படமாகும். மேலும் தேவிகா, பாலாஜியுடன் இணைந்து நடித்த "சகோதரி", நடிகை ராகினிக்கு ஜோடியாக நடித்த "இருமனம் கலந்தால் திருமணம்", நடிகவேள் எம்.ஆர். ராதாவுடன் நடித்த "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" ஆகிய படங்களும் வெளிவந்தன.

             பிரேம் நசீர் கதாநாயகனாக நடித்த மற்றொரு சிறந்த படம் "வண்ணக்கிளி" என்று சொல்லலாம். மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் இந்தப் படத்தை தயாரித்தார். டி.ஆர்.ரகுநாத் டைரக்ட் செய்தார். பிரேம் நசீருடன் டி.ஆர்.ராமச்சந்திரன், ஆர்.எஸ்.மனோகர் மற்றும் பி.எஸ்.சரோஜா, மைனாவதி, முத்துலட்சுமி, எம்.சரோஜா, சி.எஸ.சரசுவதி ஆகியோரும் நடித்திருந்தார்கள்.

                இந்த படத்தில் இடம்பெற்ற "அடிக்கிற கைதான் அணைக்கும்" என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது. மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய பிரேம் நசீர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் சில படங்களில் சேர்ந்து நடித்தார். "பாலும் பழமும்", "முரடன் முத்து" ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்கள். 1964-க்குப் பிறகு மலையாள பட உலகில் அதிக வாய்ப்புகள் குவிந்ததால் பிரேம் நசீர் தமிழ்ப்பட நடிப்பை குறைத்துக் கொண்டார்.

             என்றபோதிலும் சென்னை நகரில் அவர் அதிகம் தங்கி இருப்பதையே வாடிக்கையாக கொண்டிருந்தார். பிரேம் நசீருக்கு 1988-ம் ஆண்டு டிசம்பரில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் சிகிச்சையால் அவரை காப்பாற்ற இயலாமல் போயிற்று. 16-1-1989 அதிகாலை அவர் மரணம் அடைந்தார்.

              அவரது மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் உடன் இருந்தனர். பிரேம் நசீர் உடலுக்கு தமிழ்த்திரை உலக நடிகர்- நடிகைகள், பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு அவரது உடல் விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

              காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோணி, மந்திரிகள் பாலகிருஷ்ணன், நீலயோகிதாசன் நாடார், நடிகர் மம்முட்டி ஆகியோர் மரியாதை செலுத்தினர். அதன்பிறகு பிரேம் நசீர் உடல் சொந்த ஊரான சிறையின் கீழு என்ற இடத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மலையாள பட உலகின் ஒரு சகாப்தம் முடிவடைந்தது. நடிகர் பிரேம் நசீர் மறைவுக்கு பிரதமர் ராஜீவ் காந்தி இரங்கல் தெரிவித்தார்.

            அவர் வெளியிட்ட செய்தியில், "பிரேம் நசீர் திரை உலகில் நீண்ட காலமாக புகழ் பெற்று விளங்கிய சிறந்த நடிகர். மனித உணர்ச்சிகளை நடிப்பின் மூலம் நயம்பட வெளிப்படுத்தியவர். அவர் மறைவினால் தேசம் ஒரு சிறந்த நடிகரை இழந்து விட்டது. நாட்டு மக்கள் தங்கள் இதயம் கவர்ந்த ஒருவரை இழந்துவிட்டார்கள்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

             தி.மு.க. தலைவர் கருணாநிதி, திரைப்பட தயாரிப்பாளர்கள் பலரும் அனுதாப செய்தி வெளியிட்டு இருந்தார்கள். எம்.ஜி.ஆர், என்.டி.ராமராவ் திரை உலகில் இருந்து அரசியலில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டினார்கள்.

            அவர்களை பின்பற்றி மலையாள ரசிகர்களிடம் பிரபலமாக விளங்கிய பிரேம் நசீரும் அரசியல் கட்சி தொடங்கினார். ஆனால் கேரளத்து மக்கள் அவரை ஒரு சிறந்த நடிகர் என்ற கண்ணோட்டத்தில்தான் பார்த்தார்களே தவிர அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பிரேம் நசீரின் அரசியல் பிரவேசம் வெற்றி பெறவில்லை…


0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Sign Out