கொஞ்சம் மணிரத்னம்...கொஞ்சம் முக்தா சீனிவாசன்... | MG SILVERSTAR SIBI VINNARASAN
  • கொஞ்சம் மணிரத்னம்...கொஞ்சம் முக்தா சீனிவாசன்...

    கொஞ்சம் மணிரத்னம்...கொஞ்சம் முக்தா சீனிவாசன்...
          இயக்குனர் மணிரத்னம் - கேப்டன் விஜய்காந்தை போல பேசி இருக்கிறார். "கலைஞரும், ஜெயலலிதாவும் ஒழுங்கா ஆட்சி செஞ்சிருந்தா - நான் எதுக்கு அரசியலுக்கு வந்திருக்கப்போறேன்.


             "என்றது போல "70 களில் இயக்குனர்கள் ஒழுங்கா படம் எடுத்திருந்தா - நான் எதுக்கு சினிமா டைரக்டரா ஆகி இருக்கப்போகிறேன்" என்று சொல்லி இருக்கிறார்.

           ‘ஒரு ஒழுக்கமான எம்.பி.ஏ., ஸ்டூடண்டா நான் பாட்டுக்கு என் வேலையை பாத்துட்டுப் போகலாமுன்னுதான் நினைச்சேன். ஆனா எழுபதுகள்ல வந்த மட்டமான தமிழ்ப் படங்கள் தான், 'டேய் நீயாவது வந்து தமிழ் சினிமாவைக் காப்பாத்துடான்னு' கூப்பிட்ட மாதிரி இருந்ததால் தான் நான் சினிமாவுக்குள்ளேயே காலடி எடுத்து வச்சேன்’ என்கிற மணிரத்னத்தின் பேச்சு, சமீபத்தில் வெளியான பெங்குவின் பதிப்பகத்தின் வெளியீடான ‘கான்வர்சேசன்ஸ் வித் மணிரத்னம்’ என்ற புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. இது தன்னம்பிக்கையின் வெளிப்பாடா அல்லது ?

                ‘பாலச்சந்தர் மற்றும் மகேந்திரன் படங்கள் தவிர்த்து, 70 களில் தமிழ் சினிமாவில் பல திராபையான படங்களை நான் தொடர்ந்து பார்க்க நேர்ந்ததால், ஆத்திரமுற்று சினிமா எடுக்க வந்தேன். அப்போது மற்ற இயக்குனர்களும் நல்ல படங்கள் எடுத்திருந்தால் நான் தமிழ் சினிமா பக்கம் தலை வைத்தே படுத்திருக்க மாட்டேன்,’ என்கிறார் மணிரத்னம். மணிரத்னத்தின் பேச்சு சரியா என்பதோடு - மணிரத்னத்தின் நாயகன் பட சம்பந்தமாக இயக்குனர் முக்தா சீனிவாசன் சொன்ன கருத்துகளையும் பார்ப்போம். (அதை மட்டும் வாசிக்க விரும்புவோர் - கீழே பெரிய எழுத்துகளில் உள்ளது. வாசித்து கொள்ளலாம)

               தமிழக சினிமா 70களில் மணிரத்னம் உளறிய மாதிரி திராபையான படங்களை கொண்டா இருந்தது. மகேந்திரனை குறிப்பிடுவதால் 80களின் துவக்கக்காலமாக வைத்து கொள்ளலாம். ஏன் எனில் 80களில் தானே எம்.பி.ஏ ஸ்டூடண்டாக மணிரத்னம் இருந்திருப்பார். தமிழ் திரை உலகின் பொற்காலம் என்பர் 80'களை. அத்தகைய காலகட்டத்தை தான் பல திராபையான படங்கள் வந்ததாக குறிப்பிடுகிறார். அப்படியெனில் - அவர் அக்காலக்கட்ட படங்களை ஒழுங்காக பார்க்கவில்லை எனலாம்.


                தன்னை பெருமைப்படுத்த ஏனையோரை சிறுமைப்படுத்துவோர் - நிச்சயம் சிறந்த படைப்பாளியாக இருக்க முடியாது. தமிழ் படம் எடுப்பதாக சொல்லி கொண்டு தமிலிஷ் படங்களை எடுத்த மணிரத்னத்தின் வரலாற்றை பார்ப்போம். பல்லவி அனு பல்லவி - அவரது முதல் படமாக இருந்தாலும் தமிழுக்கு முரளி நடித்த பகல் நிலவே முதல் படம். பகல் நிலவு வந்த சில வாரங்களில் அவரது இயக்கத்தில் வந்த மற்றுமொரு படம் இதய கோவில். வரிசையாக ஐந்து நூறு நாட்கள் படங்களை தந்த (பயணங்கள் முடிவதில்லை, இளமை காலங்கள், நான் பாடும் பாடல், உன்னை நான் சந்தித்தேன், உதயகீதம்) கோவைத்தம்பி ஆறாவதாய் மணிரத்னத்தின் மூலம் ஒரு திராபையை கொடுத்து தோல்வியை தழுவினார்.

            கோவைத்தம்பியின் ஏனைய படங்களோடு ஒப்பிடுகையில் இதயகோவில் வெற்றியில் மட்டுமல்ல தரத்திலும் சுமாரே. "திராபைகளிலிருந்து வித்தியாசமாய் எடுக்க போகிறேன்" என்று சொல்லி கொண்டே வெள்ளிவிழா நாயகன் மோகன் கையில் பத்தாவது முறையாக மைக்கை கொடுத்தார். என்ன புதுமையோ. பகல் நிலவு வழக்கமான "தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்... மறுபடி தர்மம் வெல்லும்" பாணி கதையே. தமிழ் திரை உலகிற்கு மட்டரகமான படங்கள் வந்தது போதாதென்று - மேலும் மணிரத்னம் கொடுத்த இரண்டு திராபையான படங்கள் அவை.

              அடுத்து மணிரத்னம் - தம் அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் (வேறு தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை போலும். வெற்றி முகங்களான இளையராஜாவையும், மைக் மோகனையும் வைத்து கொண்டு திராபையான படம் கொடுத்தால் எந்த தயாரிப்பாளர், அவர் வீட்டு கதவை தட்டுவார்) "மௌன ராகம்" எடுத்தார். அண்ணனே தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் என்பதால் - சென்னையிலும், மதுரையிலும் வலுக்கட்டாயமாக வெள்ளி விழா கொண்டாடினார்கள். மௌன ராகம் இன்றும் பலரால் சிலாகிக்கப்படத் தான் செய்கிறது. தமிழில் வந்த பல அற்புதமான படங்களோடு ஒப்பிட்டால் - மௌனராகம் மிக சாதாரண படமே.​

              மணிரத்னத்தின் ஆரம்ப படங்களில் மகேந்திரனின் பாதிப்பு நிறைய இருந்தது. "பல்லவி அனுபல்லவி கிளைமாக்ஸ் மற்றும் மௌனராகம் கதையே நெஞ்சத்தை கிள்ளாதேவை ஞாபகப்படுத்துபவையே" அடுத்து இயக்குனர் முக்தா சீனிவாசன் தயாரிப்பில், மணிரதன்ம் இயக்கிய நாயகன் பற்றி. முக்தா சீனிவாசன் "நாயகன்" குறித்து சொன்ன கருத்துகளிலுள்ள நியாயத்தை இறுதியாக பகிர்கிறேன். தமிழ் திரைஉலகில் வந்த சில குறிப்பிடத்தக்க படங்கள் - தமிழ் திரை உலகின் போக்கையே மாற்றி உள்ளன. அவற்றில் சில பராசக்தி, பதினாறு வயதினிலே, நாயகன்... பாடல்களால் பின்னப்பட்டு இருந்த திரை உலக கட்டுக்களை விடுவித்தது பராசக்தி. பகுத்தறிவையும் விதைத்தது.


              யதார்த்தம் என்றால் காததூரம் ஓடிய தமிழ் சினிமாவில் யதார்த்த வாழ்க்கையை பதிவு செய்த 16 வயதினிலே. அதன் காரணமாக 80கள் பல அற்புத படங்களை தந்தது. மேற்கண்ட இரண்டு படங்கள் தமிழ் திரை உலகிற்கு நன்மையை மட்டுமே தந்தது என்றால் நாயகன் நன்மையோடு தீமையையும் தந்தது. பாரதிராஜா காட்டிய யதார்த்ததிற்கும் மணிரத்னம் காட்ட நினைத்த யதார்த்ததிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பதினாறு வயதினிலேக்கும், சண்டியர் விருமாண்டிக்குமான வித்தியாசம் தான். யதார்த்தம் என்கிற பெயரில் தமிழ் சினிமாவில் நுழைந்தது க்ரூரமான வன்முறை காட்சிகள் - மணிரத்னதால். அது, பிறகு இந்திய சினிமாவிலும் பரவியது.

              அந்நாளில் ஒரு வார இதழில் வந்த கிசுகிசு. சிவாஜியின் "கருடா சௌக்கியமா" என்கிற படத்தின் உல்டாவாம் நாயகன் என்று. கருடா சௌக்கியமா படத்தின் நாயகனும் ஒரு கடத்தல் பேர்வழி. அதன் காரணமாக அப்படி கிசுகிசுத்து இருக்கலாம். யோசித்து பார்த்தால் ஏனைய மசாலா இயக்குனர்களின் திராபை படங்கள் போல தான் மணிரத்னத்தின் படங்களும் - ஆனால் அது தெரியாத வண்ணம் 'அறிவுஜிவியின் படம் போல நகாசு வேலை காட்டி ஜெயித்துவிடுவதில் வித்தகர் மணி' பாமர ரசிகனும் கை தட்டுவான். அவரது நகாசு வேலை சரிவர இல்லாத படங்களில் தோற்று போகிறார். "திருடா... திருடா... ஆயுத எழுத்து... இருவர்... ராவணா..." போன்றவை.

                எம்.பி.ஏ மாணவர் என்பதால் - எதை எப்போது சந்தைப்படுத்துவது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார் என்பதை தேசப்பற்று "ரோஜா, பம்பாய்" ஈழப்பற்று, "கன்னத்தில் முத்தமிட்டால்" போன்ற படங்களை - சரியான நேரத்தில் எடுத்து காசு பார்த்ததில் தெரிகிறது.​மணிரத்னத்தின் ஆஸ்தான வசனகர்த்தாவான சுஜாதா மணிரத்னத்தை பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். சுஜாதா இரண்டு விதமான விமர்சனங்களை வைக்கிறார். மணிரத்னத்தின் தொடர்பு கிடைக்காத கால கட்டத்தில் வைத்த விமர்சனத்தையும், மணிரத்னத்துக்கு வசனகர்த்தாவாக ஆன பின் வைத்த விமர்சனத்தையும் பார்ப்போம்.

               அஞ்சலி படம் வந்த போது வைத்த விமர்சனம். "எந்த கதவை திறந்தாலும் புகையா வருது" என்று மணிரத்னத்தின் காட்சிப்படுத்தலை கிண்டலடித்தவர் "இவைகள் தான் இந்திய குழந்தைகளா? மணிரத்னம் காட்டும் குழந்தைகள் உலகுக்கும், இந்திய நிஜத்திற்கும் ரெம்ப தூரம்" என்றவர் 'உயிரே' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத போது ரசிகர்களை குறை கூறினார். காரணம் - அப்போது மணிரத்னத்தின் குழுவோடு ஐக்கியமாகிவிட்டார். அதே கால கட்டத்தில் சுஜாதா வசனமெழுதிய மற்றொரு படம். பிரசாந்த் நடித்த 'கண்ணெதிரே தோன்றினாள்' பெரும் வெற்றி பெற்றது.


              உயிரேயின் சுமாரான வெற்றி, கண்ணெதிரே தோன்றினாளின் பெரும் வெற்றி- இரண்டையுமே அவரால் தாங்க முடியாமல்-இரண்டு படைப்பையும் ஒப்பிட்டு சுமாரான சரக்கு அமோகமாக விற்றதாக எழுதினார். அதற்கு ஒரு வாசகர் கடிதம் சொன்னது."உயிரே திரைப்படத்தையும், கண்ணெதிரே தோன்றினாள் படத்தையும் ஒப்பிடாதிங்க. கண்ணெதிரே தோன்றினாளை - பகல்நிலவோடு ஒப்பிடுங்க. வளர்ந்த இயக்குனரோடு, வளரும் இயக்குனரை ஒப்பிடாதிங்க. வெற்றிக்கு எதெல்லாம் தேவையோ (ரஹ்மான் இசை, ப்ரித்தி ஜிந்தாவின் தசை) இவைகளை வைச்சுகிட்டும் தோற்றார் - உயிரேயில்" என்கிற ரீதியில் இருந்தது - அந்த விமர்சனம். உண்மை தான்.

                ஒரு பெண் போராளியின் கதையில் ப்ரித்தியின் கவர்ச்சி எதற்கு. பெண் போராளிக்கு கனவு (?) பாட்டுல ஒரு டிரஸ் போட்டு விட்டிருப்பார் பாருங்க. கயிறாலயே ஒரு டிரஸ். போராளியை துகில் உரிவதில் சிங்களவன் செத்தான் - இந்த படைப்பாளி முன்னால். பம்பாயில் 'உயிரே... உயிரே...' பாடலில் குலுங்க, குலுங்க மனிஷா ஓடி வரும் காட்சி - அவரின் அதீத வக்ரம். தமிழ் சினிமாவின் பெரும்பாலான இயக்குனர்கள், தங்களின் முதல் சில படங்களை கவர்ச்சி என்கிற வளையத்தில் சிக்காமல் கண்ணியமாகவே எடுத்திருப்பார்கள். ஆனால் அதற்கடுத்து சம்பந்தமே இல்லாமல் - நாயகியை ஆடை குறைப்பில் காட்ட துடிப்பார்கள். அதை தான் மணிரத்னம் 'திராபை' என்று சாடினாரோ? அதையே மணிரத்னமும் செய்ய தயங்கவில்லை.

                 மணிரத்னம் -இரண்டு மொழிகளில் எடுக்க துவங்கிய பிறகு, அவரின் படங்கள் இரண்டு கெட்டானாக தான் இருந்தது. ராவணாவை போல. மலையாள இயக்குனர் பாசில் தமிழில் செய்த அற்புதங்களை கூட தமிழ் இயக்குனர் மணி செய்யவில்லை. இவரால் தான் தமிழ் திரையுலகம் விமோசனம் பெற போகிறதா? இவரின் எந்த படங்களாவது சாதாரண தமிழர்களின் உண்மை வாழ்க்கையை பிரதிபலித்துள்ளதா? பாலாவை போல விளிம்பு நிலை மனிதர்களை பதிவு செய்துள்ளதா? தளபதி தான் அவருக்கு விளிம்பு நிலை மனிதர்களின் கதையாம். நடிகர் திலகம் சிவாஜி நடித்த பட்டாக்கத்தி பைரவன் என்கிற திராபையை தான் "தளபதி" ஆக்கினார். பட்டாக்கத்தி பைரவன் திராபைன்னா - தளபதியும் திராபையா தானே இருக்கும். அப்படி தான் இருந்தது.

              குமரிகளை வீட்டுக்கு அனுப்பி விட்டு கிழவிகளை கொண்டு "ருக்குமணி.. ருக்குமணி..." ன்னு ஆட்டம் பாட்டம் போட்டது தான் அவர் பாணியில் புதுமை போலும். கதாநாயகி சிகரெட் பிடிக்கிறது, "ஓடிப் போயிடலாமா"ன்னு கேட்கறதெல்லாம் புதுமையோ புதுமை போலும். தமிழ் திரை உலகை பொறுத்தவரை - ஒரு காலத்தில் ஸ்ரீதரையும், பீம்சிங்கையும் சிலாகித்தார்கள். பிறகு பாலசந்தரை... பிறகு மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா... பிறகு மணிரத்னம், சங்கர், பாலா... அடுத்தடுத்த தலைமுறை இயக்குனர்கள் வரும் போது "ஸ்ரீதரை மறந்த மாதிரி மணிரத்னத்தை மறக்கிறார்களா அல்லது தலைமுறை தாண்டி மகேந்திரனை கொண்டாடுவதை போல கொண்டாடப்பட்டு கொண்டே இருப்பாரா என்று பார்ப்போம்" தன்னை பெருமைப்படுத்த ஏனையோரை சிறுமைப்படுத்துவது நாகரீகமே அல்ல என்பதை மணிரத்னம் புரிந்து கொள்ள வேண்டும்.

              "பசி பட இயக்குனர் துரை "மயில்" என்றொரு படம் எடுத்தார். ரோடு போடும் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்த படம்" அறிவாரா மணிரத்னம். தமிழ் சினிமாவில் காட்டப்படாத விளிம்பு நிலை மனிதர்களின் கதை நிறைய உள்ளது. அவார்டுகளை வாங்கி குவித்த மணிரத்னத்தின் எந்த படமாவது அவைகளை சித்தரித்திருந்ததா? கவியரசரின் பாடல் ஒன்று - சம்பந்தமே இல்லாமல் இந்த இடத்தில், ஞாபகத்திற்கு வருகிறது. "புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை".

                இனி, முக்தா சீனிவாசன் கருத்துக்கு வருவோம். பலரும் - நாயகன் வெளிவந்த 87ம் வருஷ காலக்கட்ட தமிழ் சினிமா உலகை புரிந்து கொள்ளாமல் கருத்து சொல்கிறார்கள். கமல் ரசிகராக இருந்து பார்த்தால் கோபம் தான் வரும். ஆனால் யதார்த்தம்? இன்றைக்கு இருப்பது போல அன்றைக்கு வியாபாரச்சூழல் கிடையாது. கமல் படங்கள் மொத்தம் நாற்பது ப்ரிண்ட்கள் போட்டால் அன்று பெரிய விஷயம். அறுபது, எழுபது லட்சத்துக்கு தான் வியாபாரமும் ஆகும். 

                காக்கிசட்டைக்கு பிறகு நாயகன் வரை கமல் எட்டு படங்கள் நடித்திருந்தார். அதில் புன்னகை மன்னன் மட்டுமே வெற்றி. விக்ரம் - சுமாரான வெற்றி. ஏனைய படங்களான 'அந்த ஒரு நிமிடம், உயர்ந்த உள்ளம், மங்கம்மா சபதம், ஜப்பானில் கல்யாணராமன், நானும் ஒரு தொழிலாளி, காதல் பரிசு, பேர் சொல்லும் பிள்ளை' என்று எதுவுமே சரியாக போகாத படங்கள். படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் ஒரே மாதிரி விற்பனையாக - அவர் எம்.ஜி.ஆரோ, ரஜினியோ அல்ல. 

             இத்தகைய சூழலில் தான் முக்தா சீனிவாசன் - படத்திற்கு போட்ட பட்ஜெட் எவ்வளவு, ஆன செலவு எவ்வளவு, அது வியாபாரமாகக் கூடிய வாய்ப்பு எப்படி என்று எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்க்கிறார். கணக்கு சரியாக வராது என்று நினைத்தார். அன்றைக்கெல்லாம் பூஜை போட்டு படப்பிடிப்பு தொடங்கிய அறுபதாவது நாள் படம் வெளிவந்துவிடும். மணிரத்னம் இழுத்து கொண்டே இருந்தது, ஆகி கொண்டே இருந்த செலவு போன்றவையை எல்லாம் -எதையும் திட்டமிட்டு செய்யும் பழைய தயாரிப்பு நிறுவனங்களால் ஜுரணிக்க இயலவில்லை.

               கடைசியாய் மணிரத்னத்தின் அண்ணன் ஜி.வி தான் படத்தை விநியோகம் செய்தார். ரோல்களை விரையம் செய்வது, வருஷக்கணக்காய் படம் எடுப்பது என்கிற ட்ரண்டை துவக்கி வைத்தது ஆபாவண்ணனும், மணிரத்னமும் தான். அதையே சங்கர், பாலா, கௌதம் மேனன் என்று பெரிய டைரக்டர்கள் மட்டுமின்றி சிறிய டைரக்டர்களும் பாரபட்சமில்லாமல் கடைபிடிக்க துவங்கிவிட்டார்கள். 

            "முதலாளி" எனும் படத்தின் மூலம் 1958ல் இயக்குனரான முக்தா சீனிவாசன் - கிட்டத்தட்ட 1988 வரை முப்பது வருஷங்கள் முக்தா பிலிம்ஸ் நிறுவனம் செயல்பட்டது. கடைசியில் நஷ்டப்பட்டு படத்தயாரிப்பை நிறுத்தவில்லை. "இந்த ட்ரண்ட்டில் நாம் காலம் தள்ள முடியாது" என்று சரத்குமாரின் (ராஜபாண்டி) படமொன்றோடு தயாரிப்பை நிறுத்தி கொண்டார்கள். இன்றும் நிம்மதியாக இருக்கிறார். 

             ஜி.வியின் சுஜாதா பிலிம்ஸ் அகலக் கால் வைத்து, சிறு சிறு வினியோகஸ்தர்களை துடைத்தெறிந்து, வினியோகத்துறையில் தம் பயணத்தை துவங்கி, கடைசியில் அற்பாயுசில் முடிந்தது. குஞ்சுமோன், சூரியா மூவிஸ் ஏ.எம்.ரத்னம், தாணு, காஜா மொய்தீன் என்று - பெரிய படமெடுத்த அனேகரின் நிலைமையும் இன்று அதே. எளிமையாக இருந்த தமிழ் சினிமாவின் தயாரிப்பை சிக்கலாவதற்கான பிள்ளையார் சுழி ஜி.வி போன்றவர்களால் போடப்பட்டது. தயாரிப்பு செலவு வீணே அதிகரித்தது. பங்கு வர்த்தகத்தில் இறங்கியது சுஜாதா பிலிம்ஸ். 


                  முக்தா சீனிவாசன் காலத்தில் எல்லோரும் பிழைக்க வழி இருந்தது. இன்றைக்கு இந்த இயக்குனர்களின், நடிகர்களின் ஆட்டங்களால் - தயாரிப்பாளரே பிழைக்க வழி இல்லாமல் தற்கொலைக்கு முயல்கிறார்….


0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Sign Out