ஏ. ஆர். ரஹ்மான்: இசையின் நவீனம் | MG SILVERSTAR SIBI VINNARASAN
  • ஏ. ஆர். ரஹ்மான்: இசையின் நவீனம்

    ஏ. ஆர். ரஹ்மான்: இசையின் நவீனம்

             ஏ. ஆர். ரஹ்மான் என்றழைக்கப்படும் அல்லா ரக்கா ரஹ்மான் இந்தியத் திரை இசையின் நவீன முகம். இரு தசாப்தங்களாக இந்த தேசத்தின் இசை ரசனையில் – குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் – வலுவான பாதிப்பை ஏற்படுத்தி இருப்பவர்.


            சென்னையில் ஓர் உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த திலீப் குமார் தான் இன்று சர்வதேச அளவில் தன் இசைச்சிறகுகளை விரிந்திருக்கும் இந்த ரஹ்மான். பிறப்பால் இந்துக்கள்தான் என்றாலும் அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு சில‌ சிக்கல்கள் தீர்ந்த நம்பிக்கையில் இஸ்லாத்திற்கு மாறியது அவர் குடும்பம்.

        ரஹ்மானின் தந்தை ஆர். கே. சேகரும் ஒரு புகழ் பெற்ற இசையமைப்பாளரே. அவர் பெரும்பாலும் பணியாற்றியது மலையாளப் படங்களில். ரஹ்மானுக்கு முதலில் இசை பயிற்றுவித்தவர் அவரே. ஆனால் சிறுவயதிலிருந்தே வீட்டில் இசைக் கருவிகளும் சினிமாக்காரர்களும் சூழ வாழ நேர்ந்தால் இசையின்மீதும் சினிமாவின் மீதும் பெரிய ஆர்வம் ஏதும் ரஹ்மானுக்கு ஏற்பட‌வில்லை. ஒரு மின்பொறியாளர் ஆக வேண்டும் என்பதே அவரது சிறுவயதுக் கனவாக இருந்தது.

            பிற்பாடு இசையின்மீது ஆர்வம் வந்தது இரு காரணங்களால். ஒன்று அவரது தந்தை வைத்திருந்த நவீன மின்னணு இசைக் கருவிகள். ரஹ்மானின் ஆர்வம் மின்பொறியியல் என்பதால் இந்தக் கருவிகள் அவரை வசீகரித்தன. அதாவது ஒரு தொழில்நுட்ப மாணவனாகவே அவர் இசைக் கருவிகளை அணுகினார். தொடக்க காலம் முதல் இன்று வரை அவரது இசையின் பிரதானக்கூறும் தனித்துவமும் இந்தத் தொழில்நுட்பத் துல்லியமே என்பதற்கான பின்புலக் காரணம் இதுதான்.

           இரண்டாவது காரணம் ரஹ்மானின் பத்தாவது வயதிலேயே அவரது தந்தை காலமாகிவிட, வீட்டின் மூத்த ஆண் என்ற வகையில் குடும்பச் சுமை அவர் தலையில் விழுந்தது. பள்ளி சென்று கொண்டிருந்த அந்த வயதில் கற்றிருந்த ஒரே விஷயமான இசையைத்தான் அவர் தொழிலாகத் தேர்ந்தெடுக்க நேர்ந்தது.

           ரஹ்மான் என்ற‌ அற்புதம் நிகழ்ந்தது சூழலின் அழுத்தம் ஏற்படுத்திய விபத்தே. இசைக் குழுக்களில் வாசிப்பவராகத் தன் கலைப் பயணத்தைத் தொடங்கினார்.

           இந்த ஆரம்பகட்டத்தில் இளையராஜா, எம். எஸ். விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதன், எல். சங்கர் ஆகியோரிடம் ரஹ்மான் பணியாற்றியிருக்கிறார். இளையராஜாவிடம் (விஜய் மேனுவல் என்பவரின் கீழ்) கீபோர்டிஸ்டாக இருந்த‌போது ரஹ்மான் வாசித்த புன்னகை மன்னன் தீம் ம்யூஸிக் மிகப் பிரசித்தம்.

            சிறுவயதில் தூர்தர்ஷனின் வொன்டர் பலூன் என்ற குழந்தைகள் நிகழ்ச்சியில் ஒரே சமயம் நான்கு கீபோர்ட் வாசித்திருக்கிறார். மலேஷியா வாசுதேவனுடன் இணைந்து டிஸ்கோ டிஸ்கோ, மால்குடி சுபாவுடன் இணைந்து ஸெட் மீ ஃப்ரீ, டீன் இசை மாலை என்ற சூஃபி இசை ஆல்பத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

    தொலைக்காட்சி விளம்பரப் படங்களுக்கும் இசையமைத்தார். 90களில் அவர் இசையமைத்த‌ சில விளம்பரங்கள்:

               1992ல் மணி ரத்னத்தின் இயக்கத்தில் கே. பாலச்சந்தர் ஒரு படம் தயாரித்தார். அப்போது இருவருமே இளையராஜாவுடன் – இசை அல்லாத வேறு தனிப்பட்ட காரணங்களால் – கசப்புற்று இருந்தனர். பாலச்சந்தர் ஏற்கெனவே மரகதமணியை (எம். எம். கீரவாணி) வைத்துப் படங்களுக்கு இசைய‌மைத்துக் கொண்டிருந்தார்.

         இருவரும் இணைவதால் மணி ரத்னமும் இம்முறை இளையராஜாவை விடுத்து வேறொரு இசையமைப்பாளரைத் தன் படத்துக்குப் பயன்படுத்தத் தீர்மானித்தார்.

           ராஜீவ் மேனன் அப்போது திரைப்பட ஒளிப்பதிவாளராக வந்திருந்த புதிது. அது போக‌, விளம்பரப் படங்களும் எடுத்துக் கொண்டிருந்தார். அவரது விளம்பரப் படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்துக் கொண்டிருந்தார். மணி ரத்ன‌த்திடம் அவரை அறிமுகம் செய்து வைத்தார் மேனன். அந்தத் திரைப்படம் ரோஜா.

            ரஹ்மான் திரை வாழ்க்கை தொடங்கியது. ஓர் இசைச் சகாப்தத்தின் ஆரம்பம் அது. ரோஜாவின் வசனகர்த்தாவான எழுத்தாளர் சுஜாதாவிடம் அப்போது ரஹ்மானை அறிமுகம் செய்திருக்கிறார் மணி ரத்னம். பாடல்களைக் கேட்டு விட்டு “புகழுக்குத் தயாராகுங்கள்” என்று சொல்லி இருக்கிறார் சுஜாதா. பிற்பாடு நடந்தது அதுதான்.

       ரோஜா என்ற‌ அந்த‌ முதல் முயற்சியிலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார் ரஹ்மான். அந்த விருதிலும் சுவாரஸ்யம் ஒன்று இருக்கிறது. 1992ம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதின் இறுதிப் போட்டியில் தேவர் மகனும் ரோஜாவும் இருந்தன. இரண்டு படங்களும் தலா 7 ஓட்டுக்கள் வாங்கி சம நிலையில் இருந்தன. பாலு மகேந்திரா தான் விருதுக் குழு தலைவர். அவர் போடும் ஓட்டே விருதைத் தீர்மானிக்கும் என்ற நிலை. “ஒரு பக்கம் என் நண்பர் இளையராஜா. மறுபக்கம், இருபத்தைந்து வயது மட்டுமே நிரம்பிய ஒரு இளைஞன். ஆனாலும் இளையராஜா என்ற இசை மாமலையை எதிர்த்து ஒரு சிறுவன் நிற்கிறானே, அவனுக்கு இப்போது கிடைக்கும் தேசிய விருது இன்னும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்குமே என்று நினைத்தேன். தலைவர் என்ற முறையிலேயும் உறுப்பினர் என்ற முறையிலும் எனக்கு இருந்த இரண்டு ஓட்டுகளையும் ரஹ்மானுக்கே போட்டு ஜெயிக்க வைத்தேன்” என்று சொல்கிறார் பாலு மகேந்திரா (இந்திர விழா என்ற படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவில் இதைப் பகிர்ந்து கொண்டார்).

              முதல் படத்திலேயே நாடறிந்த இசையமைப்பாளர் ஆனார் ஏ. ஆர். ரஹ்மான். ஏ. ஆர். ரஹ்மான் சினிமாவில் நுழைந்து 21 ஆண்டுகள் ஆகிறது. அவரது இசைப் பயணத்தை நான்கு முக்கியக் கட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் பகுதியில் தமிழ் நாட்டில் பிரபலமடைந்தார். இரண்டாம் பகுதியில் இந்திப் படங்களின் மூலம் வட இந்தியாவில் அறிமுகமானார். மூன்றாம் பகுதியில் இந்தியா முழுக்க ஆதிக்கம் செலுத்தினார். நான்காம் பகுதியில் சர்வதேசிய‌ அளவில் பிரசித்தி பெற்றார்.

            1992 முதல் 1995 வரை. ரோஜா, புதிய முகம், ஜென்டில்மேன், கிழக்குச்சீமையிலே, திருடா திருடா, டூயட், மே மாதம், காதலன், கருத்தம்மா, பம்பாய், இந்திரா ஆகிய படங்களுக்கு இசை அமைத்தது இந்த ஆரம்ப ஆண்டுகளில் தான். என் வரையில் ரஹ்மானின் ஆகிச் சிறந்த படைப்பூக்கம் வெளிப்பட்ட‌ காலகட்டம் இதுவே.

              1996 முதல் 2000 வரை ராம் கோபால் வர்மாவின் ரங்கீலா வழியாக இந்தியில் பிரவேசித்தாலும் தாள் (தாளம்), தில் சே (உயிரே) தவிர அங்கே நிறைய படங்கள் பணியாற்றவில்லை. தொடர்ந்து தமிழ் படங்களில் கோலோச்சினார். மின்சாரக் கனவுக்காக தேசிய விருது பெற்றார். வந்தே மாதரம் ஆல்பத்தை வெளியிட்டார். ரஜினி படங்களுக்கும் (முத்து, படையப்பா), கமல் படங்களுக்கும் (இந்தியன், தெனாலி) இசையமைத்தது இந்தக் காலகட்டத்தில் தான். லவ்பேர்ட்ஸ், காதல் தேசம், மின்சாரக் கனவு, இருவர், ரட்சகன், ஜீன்ஸ், உயிரே, என் சுவாசக் காற்றே, காதலர் தினம், சங்கமம், ஜோடி, தாஜ்மஹால், முதல்வன், அலைபாயுதே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களுக்கு இசை அமைத்தார்.

            2001 முதல் 2007 வரை. லகான், ரங் தே பசந்தி, யுவா (ஆய்த எழுத்து) ஸ்வதேஸ், குரு, ஜோதா அக்பர், ஜானே து யா ஜானே நா, கஜினி, பாம்பே ட்ரீம்ஸ் (ஆல்பம்) ஆகிய படங்களின் வழி இந்தித் திரையுலகில் ரஹ்மான் இசைச் சக்கரவர்த்தியாக உயர்ந்த ஆண்டுகள் இவை. லகான், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களுக்கு தேசிய விருதுகள் பெற்றார். க்ரெய்க் ஆம்ஸ்ட்ராங் என்ற ஸ்காட்லாண்ட் இசை அமைப்பாளருடன் இணைந்து சேகர் கபூரின் Elizabeth: The Golden Age படத்திற்கு இசையமைத்ததன் மூலம் ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். பாபா, பாய்ஸ், சில்லுனு ஒரு காதல், வரலாறு, சிவாஜி ஆகிய படங்களுக்கு இசை அமைத்தார்.

              2008 முதல் இன்று வரை. உலக‌ அளவில் ரஹ்மான் புகழ் பெற்றதும் Slumdog Millionaire படத்துக்காக கிராம்மி, ஆஸ்கர், பாஃப்டா, கோல்டன் க்ளோப் ஆகிய சர்வதேசிய விருதுகளை அவர் பெற்றதும் இந்தக் காலத்தில் தான். சக்கரக்கட்டி, டெல்லி 6, விண்ணைத் தாண்டி வருவாயா, ராவணன், எந்திரன், ராக்ஸ்டார், 127 Hours, கடல், மரியான் ஆகிய படங்களுக்கு இந்த ஆண்டுகளில் இசைய‌மைத்தார்.

             தற்போது கோச்சடையான், ஐ, சட்டென்று மாறுது வானிலை, காவியத் தலைவன், ஹைவே, பாணி, விண்டோ சீட், The Hundred-Foot Journey, Million Dollar Arm, Mumbai Musical ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ரஹ்மானின் சொந்தத் திரைக்கதையில் ஒரு படம் உருவாக இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன‌.

            இன்னும் அவர் நிறைய தூரங்கள், பிரதேசங்கள் செல்வார். பல வெற்றிகளையும் விருதுகளையும் குவிப்பார். காலம் காத்திருக்கிறது; ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

             சந்தேகமே இல்லாமல் இளையராஜா என்ற இசை மேதமைக்கு அடுத்தபடியாக இந்தியா சினிமா கண்ட ஆகச்சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்தான்.

               இளையராஜாவுடையதைப் போல் ஆன்மாவிலிருந்து இயல்பாய்ப் பிரவாகிக்கும் ஊற்று அல்ல ரஹ்மானின் இசை; அது ஒரு க்ராஃப்ட். ஒரு விஞ்ஞானம்; ஒரு கணிதம்; திட்டமிட்ட, துல்லியமான கலை; மிக‌ உயிர்ப்புள்ள தொழில்நுட்பம்.

              ரஹ்மான் கடுமையான உழைப்பாளி. ஒரு பாடலுக்கென மனதில் தோன்றும் ஒரு மிகச் சிறிய பொறியிலிருந்து தொடங்கி, அதைக் கவனமாய்ச் செதுக்கி, நுட்பமாய் மெருக்கேற்றி, அழகாய் அலங்கரித்து மிகச் சிறப்பான படைப்பாய்த் தருகிறார்.

            இதன் காரணமாகவே அவரது பாடல்களில் பல அடுக்குகள் சாத்தியமாகிறது. நாம் நூறாவது முறை கேட்கும் போதும் ஒரு புதிய விஷயம் அகப்பட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்துவது அதனால் தான். அவர் அப்பாடலில் தன் நூறாவது முயற்சியில் அந்த வியப்பைச் சொருகி இருக்கக்கூடும். அவ்வளவு தூரம் சிறந்த படைப்பாக வர ரஹ்மான் மெனக்கெடுகிறார். அதனால் தான் அவர் பொதுவாய் இசை அமைக்க நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறார். போன்ஸாய் உருவாக்கும் ஒரு ஜப்பானிய தோட்டக்காரனின் பொறுமையையும் துல்லியத்தையும் இதனோடு ஒப்பிடலாம்.

            ரஹ்மானின் பிற்காலத்திய பாடல்கள் பெரும்பாலும் நமக்கு முதல் கேட்டலில் அவ்வளவாய் ஈர்க்காமல் போவதற்குக் காரணம் அவற்றின் நுட்பமான அடுக்குகள் ஆரம்பத்தில் நம‌க்குப் பிடிபடாமல் போவது தான். தொடர்ந்த கேட்டலில் மெல்ல முடிச்சுக்கள் அவிழ்கின்றன. உண்மையில் ரஹ்மான் இசையினூடாக நம்மைக் குழந்தைகளாக்கி வேடிக்கை காட்டுகிறார். ரஹ்மான் கடைசியாய் அமைத்த எளிமையான மெட்டு ‘சின்ன சின்ன ஆசை’ (ரோஜா) எனத் தோன்றுகிறது.

           அவர் இசையின் இலக்கணங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதில்லை. அவற்றில் அவருக்குப் பாண்டித்யம் இருந்தாலும் அதை உடைக்க தொடர்ந்து முயல்கிறார். தன்னிடம் பணியாற்றும் இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களுக்கு பூரண சுதந்திரம் அளிக்கிறார். அவர்களின் சேஷ்டைகள் மூலமாக தன் படைப்பு இன்னும் மெருகேறும் என்றால் அதைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்கிறார். சினிமா இசை என்பது ஒரு கூட்டுக் கலை என்பதை சுத்தமாகப் புரிந்து வைத்திருப்பவர்.

             ரஹ்மானின் முக்கிய சாதனை இசையையும் தொழில்நுட்பத்தையும் இணைத்தது தான். தொழில்நுட்பத்தின் குழந்தை அவர். அந்த வகையில் இளையராஜாவுக்கு ஹார்மோனியம் என்றால் ரஜ்மானுக்கு சிந்த்தசைஸர் எனலாம். அதனால் தான் அவரது பாடல்களின் ஒலியமைப்பு மிகுந்த தரம் வாய்ந்ததாக இருக்கிறது.

           ஏ. ஆர். ரஹ்மான் சினிமா இசையை முழுமையாய் நவீனமாக்கினார். அதாவது இசையின் உள்ளடக்கம் மட்டுமல்லாது அதன் மொத்த‌ ஆக்கத்திலும் நவீனத்தைப் புகுத்தினார். இரண்டிலுமே தொடர்ந்து சர்வதேச அளவில் என்னென்ன புதிய விஷயங்கள் வருகின்றனவோ உடனடியாக அதற்கேற்றாற் போல் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள அவர் ஒருபோதும் தவறியதில்லை. அது தான் அவரது USP.

            Panchathan Record Inn and AM Studios என்ற கோடம்பாக்கத்தில் அவரது வீட்டுக்குப் பின்னாலேயே இருக்கும் அவரது ஸ்டூடியோ அதற்கு உதாரணம். இசையைப் பொறுத்தவரை ஆசியாவின் மிக நவீனமான ஸ்டூடியோக்களில் ஒன்று இது. ஒலியமைப்புக்கு தேசிய விருதுகள் பெற்ற ஏ. எஸ். லக்ஷ்மிநராயணன், ஹெச். ஸ்ரீதர் ஆகியோர் ரஹ்மானின் இந்த‌ ஸ்டூடியோவில் பணியாற்றியவர்கள்.

       வெளிநாட்டிலிருந்து கொண்டே மின்னஞ்சல் மூலம் இசைக்குறிப்புகளை அனுப்பி இங்கே பாடல் பாடி பதிவு செய்யப்ப‌டும் அளவுக்கு அவர் நவீனமாய் இருந்தார்.

            ரஹ்மானின் இசை இந்த மண்ணோடு சம்மந்தப்பட்டதல்ல. அவர் பிரபஞ்சத்தின் பிரதிநிதி. அவர் இசையமைத்த கிழக்குச்சீமையிலே, கருத்தம்மா, தாஜ்ம‌ஹால் போன்ற கிராமியப் படங்களில் கூட தமிழிசையை அமுக்கி விட்டு நவீனமே மேலோங்கி நின்றது. குறிப்பிட்ட இசையில் நேட்டிவிட்டி இருந்தால் கிட்டும் படைப்பு நேர்மையை விட அதுவரை யாரும் செய்திராத புதுமை முயற்சியாய் இருக்க வேண்டும் என்பதற்கே அவர் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்.

             ரஹ்மான் ஒரு கட்டத்தில் முழுக்க பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தியதால் இங்கே தமிழில் மணி ரத்னம், ஷங்கர், ரஜினி இவர்களுக்கு மட்டும் இசை அமைத்துக் கொடுத்தார் எனக் குற்றச்சாட்டு உண்டு. ஆனால் யோசித்துப் பார்த்தால் அது தானே சரியானது! வளர்ச்சிப் பாதையில் இருக்கும் எந்த இளைஞனும் அவ்வாறே முடிவெடுக்க முடியும். பத்தாண்டுகளுக்கு மேலாய்ப் போதுமான அளவு இங்கே பங்களித்து விட்டு தான் அங்கே சென்றார்.

        இந்தியிலும் ஆங்கிலத்திலும் இசையமைத்ததை மேலும் உயரத்திற்குப் போனார் என்று சொல்வதை விட மேலும் பரவலாய் மக்களைச் சென்றடைந்தார் என்றே சொல்ல வேண்டும். அதாவது ஆழ உழுவதை மறுதலித்து அகல உழுதார்.

            ரஹ்மான் தமிழ் இசையை வடக்கிலோ, இந்திய இசையை மேற்கிலோ அறிமுகம் செய்யவில்ல. அங்கே அந்தத் திரைப்படங்களுக்குத் தேவையான அவர்கள் பாணி இசையையே கொடுத்தார். அங்கு அவர்களின் ஆள் பணிபுரிந்திருந்தால் என்ன இசையை உருவாக்கி இருப்பாரோ அதையே ரஹ்மான் அவர்களுக்கு இணையாய், சமயங்களில் இன்னும் சிறப்பாய் உருவாக்கினார். Bombay Dreams, Slumdog Millionaire இரண்டும் தான் அவர் இந்திய இசையை உலகிற்குச் சொன்ன இரு முயற்சிகள். இவற்றில் Slumdog Millionaireல் அவரது மிகச்சாதாரண இசையே வெளிப்பட்டது.

              மோஸார்ட் ஆஃப் மெட்ராஸ் என அவர் அழைக்கப்படுவதில் ஓசை நயத்தைத் தாண்டி வேறேதும் பொருத்தமில்லை. ஐரோப்பிய சாஸ்திரிய சங்கீதத்தில் தன் படைப்பாளுமையை மோஸார்ட் அழுந்தப் பதிவு செய்ததைப் போல் ரஹ்மான் இந்திய சாஸ்திரிய சங்கீதத்தில் (கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இசை, சூஃபி இசை போன்றவை) பெரிய முயற்சிகள் ஏதும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

            ஓர் அபார திரை இசைக்கலைஞராகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். அதிலும் அப்ப‌டங்களின் தேவைக்கேற்பவே தன்னைத் தகவமைத்துக் கொண்டார். ஒருவகையில் ஹாலிவுட் இசைக்கலைஞர் ஆலன் மென்கெனுடன் ரஹ்மானை ஒப்பிடலாம். உண்மையில் மென்கென் ஆஃப் மெட்ராஸ் தான் ஏ. ஆர். ரஹ்மான்.

             பின்னணி இசையில் ரஹ்மான் இன்னும் தன்னை நிரூபிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. ஆனால் அது அவரது போதாமை என்றில்லாமல் முக்கியத்துவம் தாராதால் தான் அப்படி நிகழ்வதாகத் தோன்றுகிறது. அதாவது பாடல்களே அவரை மக்கள் மத்தியில் புகழ் பெறச் செய்கிறது. அதற்காக அவர் சிரத்தை எடுக்கிறார். பின்னணி இசை அதற்கு இணையாக இல்லை என்பதை பொதுமக்கள் கவனிப்பதே இல்லை. அது விமர்சகர்களின் திடல். அங்கு தன்னை அவர் முன்வைக்க மெனக்கெடுவதில்லை ரஹ்மான். ஆனால் அவரது பின்னணி இசை மிக‌ச் சிறப்பாக அமைந்த‌ ரோஜா, இந்தியன் போன்ற படங்களைக் கொண்டு பார்த்தால் அதிலும் அவர் நன்றாகப் பரிமளிக்கக்கூடியவர் என்றே தெரிகிறது.

              வெகுஜன வெற்றியின் சூத்திரம் எதுவோ அதற்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொள்கிறார். திறமையை வெளிப்படுத்துவதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

              தமிழ் மக்களைத் தாளம் போட வைத்தவர், இந்திய இளைஞர்களை ஆட்டம் போட‌ வைத்தவர். இன்று உலகெங்கும் இருப்பவர்களைத் தன் பக்கம் திருப்பி இருப்பவர். சினிமா தாண்டி சாஸ்திரிய இசையிலும் அழுத்தமாய் தன் முத்திரைகள் பதிப்பார்.

            அவரது அடக்கம் மற்றும் அமைதியான தோற்றம் அவரை இந்தியாவில் யூத் ஐகான் ஆக்கி இருக்கிறது. அதற்கும் அவரது இசைப் பங்களிப்பிற்கும் சம்மந்தம் இல்லை என்றாலும் இந்தியர்கள் பொதுவாய் ஒழுக்கத்தையும் திறமையுடன் சேர்த்து ஒரு பேக்கேஜாகவே செலிப்ரிட்டிகளிடம் எதிர்பார்க்கிறார்கள். டெண்டுல்கர் போல் ரஹ்மானும் இவ்விஷயத்தில் ரசிகர்களின் ஐடியல் ஃபிகராகத் திகழ்கிறார்.

             ரஹ்மான் பொதுவாகப் பேட்டிகளில் மிக அடக்கமாகப் பதில் சொல்வது வழக்கம். ஆனால் அதை இயல்பாக அல்லாமல் திட்டமிட்டே செய்வதாகக் குறிப்பிடுகிறார். புதிய தலைமுறை இதழுக்கு 2010ல் அளித்த பேட்டியில் “நிறையப் பேர் நம்மை எரிச்சல்படுத்த முயல்வார்கள். அவர்களுக்கு காரசாரமாகப் பதில் சொல்வது ஒரு வழி. அமைதியாய், நிதானமாய் பதில் சொல்வது இன்னோர் வழி. நான் இந்த இன்னோர் வழியைத் தேர்ந்தெடுத்தேன்” என்றார். ஆஸ்கர் விழாவில் அன்பு, வெறுப்பு இரண்டில் அன்பினைத் தேர்ந்தெடுத்ததாகச் சொன்னதன் நீட்சி இது.

             இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இசை அமைப்பாளர் ரஹ்மான் தான்.இடையில் அவர் முஸ்லிம் என்பதால் தன் சம்பாத்தியத்தில் தீவிரவாதத்திற்கு பண உதவி செய்வதாய் பொய்ச்செய்தி வெளியானது (நக்கீரன் என நினைவு).

               இன்று தன் பெயர் ஒட்டிய லேபிளைக் கொண்டே அந்த இசையை அபாரம் என்று சிலாகிக்கக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கி வைத்திருக்கிறார் ரஹ்மான். அப்படிக் கண்மூடித்தனமாய் ரசிக்குமளவு அவர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியதே ரஹ்மானின் தனிச் சாதனை தான். இசையில் அவர் ஒரு ரஜினி.

            ரஹ்மான் இன்னும் பரவலாய் உலகமெங்கும் கோடானு கோடி பேர்களைச் சென்றடைவார் என்பதில் சந்தேகமே இல்லை. சமகாலத்தில் உலக மக்களை அதிகம் வசீகரித்த இசையமைப்பாளராக உருவாகுவார். இந்திய இசை அவரின் மூலமாக உலகை அடையவில்லை என்றாலும் இந்தியா என்ற தேசம் அவரால் மரியாதையாகப் பார்க்கப்படும். நீண்ட ஆயுளுடன் வாழ அவருக்கு வாழ்த்துக்கள்!

                சமீபத்தில் குமுதம் இதழில் அளித்த ஒரு பேட்டியில் “இசையிலும் ரசனை மாற்றம் வந்து கொண்டே தான் இருக்கும். இன்றைக்கு ராஜாவைத் தாண்டி நாளைக்கு என்னையும் தாண்டி இசை ரசனை வளர்ந்து போய்க் கொண்டு தான் இருக்கும்” என்கிறார் ரஹ்மான். அதாவது காலத்திற்கேற்ப மாறும் ஃபேஷனாகவே அவர் இசையைச் சித்தரிக்கிறார். அதற்கேற்பவே அவர் மாறிக் கொள்கிறார்.

        ஆனால் உண்மையில் இசை என்பது பூரணமான கலை. தொழில்நுட்பம் காலாவதியாகும்; ஆனால் நல்ல கலை சாஸ்வதமானது. மோஸார்ட், பேக், பீத்தோவன், தியாகராஜர், முத்துசுவாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி, எல்லாம் அப்படித் தான் இன்றும் வாழ்கிறார்கள். அவர்களைக் கடந்து போவதெல்லாம் மேலோட்டமான ரசனை கொண்ட அந்தந்தக் காலத்து வெகுஜன தலைமுறைகள் மட்டுமே. தேர்ந்த ரசனை கொண்டவர்கள் வழியாக இவை வரலாற்றில் நிற்கும். ராஜா காலம் கடந்து நிற்பது போலவே ரஹ்மானும் காலம் கடந்து நிற்பார்…..


0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Sign Out