தமிழ் சினிமாவில் ‘நகைச்சுவை மன்னன்’ என அழைக்கப்படும் சந்திரபாபு அவர்களின் வாழ்க்கை வரலாறு:
‘நகைச்சுவை மன்னன்’ என அழைக்கப்பட்ட சந்திரபாபு அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல், பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் ஈடுபாடுகொண்ட அற்புதக் கலைஞனாகவும் விளங்கியவர்.
‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘ஒண்ணுமே புரியல உலகத்தில’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ போன்ற பாடல்களினால் 50 ஆண்டுகளைக் கடந்தும், தமிழிசை நெஞ்சங்களை இன்றும் முணுமுணுக்க செய்தவர். தமிழ் சினிமாவில் குறுகியகாலத்திற்குள் அதிகத் திரைப்படங்களில் நடித்து, வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பாடகராகவும் புகழின் உச்சியை அடைந்த சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: ஆகஸ்ட் 04, 1927
பிறப்பிடம்: தூத்துக்குடி, தமிழ்நாடு மாநிலம், இந்தியா
பணி: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர்
இறப்பு: மார்ச் 08, 1974
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு:
“ஜோசப் பிட்சை” என்னும் இயற்பெயர்கொண்ட சந்திரபாபு அவர்கள், 1927 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 04 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “தூத்துக்குடி” என்ற இடத்தில் ‘ஜே. பி. ரோட்டரிக்ஸ்’, என்பவருக்கும், ‘ரோசரின்’ என்பவருக்கும் மகனாக ஒரு கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் இவரை, ‘பாபு’ எனச் செல்லமாக அழைத்து வந்தனர். சந்திரகுலத்தில் பிறந்தவர் என்பதால் “சந்திர” என்ற பெயருடன் பாபுவை இணைத்து பின்னாளில், சந்திரபாபு எனத் தமது பெயரை மாற்றிக்கொண்டார். மேலும், இவருடைய தந்தை ஒரு சுதந்திரப்போராட்டத் தியாகி ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:
இவருடைய குடும்பம் சுதந்திரப்போராட்டக் காலத்தில், விடுதலைப் போரில் ஈடுபட்டு, ஆங்கில அரசால் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதால், சிறிதுகாலம் சந்திரபாபுவின் குடும்பம் இலங்கையில் வாழ்ந்து வந்தது. இதனால், தன்னுடைய பள்ளிப்படிப்பை கொழும்பிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் முடித்தார். சிறுவயதிலேயே பாடும் திறமையைப் பெற்றிருந்த அவருக்கு, எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அதிகம் காணப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மேல்நாட்டு உடைகள், பாவனைகள், கலச்சாரங்கள் போன்றவற்றின் மீது அலாதியான ஈடுபாடு இருந்தது.
திரைப்படத்துறையில் நுழைய மேற்கொண்ட முயற்சிகள்:
இலங்கையில் சிறிதுகாலம் மட்டுமே வாழ்ந்த அவருடைய குடும்பம், மீண்டும் சென்னைக்கு வந்து சேர்ந்தது. அதன் பிறகு, சினிமா துறையில் நுழைய பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், முடியாமல் போகவே மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இறுதியில் பல இன்னல்களுக்குப் பிறகு, 1947 ஆம் ஆண்டு ‘தன அமாராவதி’ என்னும் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் சினிமாத்துறையில் முதன் முதலாகக் கால்பதித்தார். பின்னர் 1952-ல் வெளிவந்த ‘மூன்று பிள்ளைகள்’ திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில், இயக்குனர் கதாபாத்திரத்தில் நடித்து, எஸ். எஸ். வாசனின் பாராட்டைப் பெற்றார்.
வெற்றி பயணம்:
1952 ஆம் ஆண்டு ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த ‘மோகனசுந்தரம்’ திரைப்படத்தில் டி. ஆர். மாகாலிங்கத்துடன் இணைந்து நடித்த இவர், ‘போடா ராஜா பொடி நடையா’ என்ற பாடலைப் பாடி, அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தார். அதனைத் தொடர்ந்து, 1950-களில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் என அனைவருடைய திரைப்படங்களிலும் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்து மிக விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார்.
1958 ஆம் ஆண்டு, பி. ஆர். பந்துலுவின் இயக்கத்தில் வெளிவந்த ‘சபாஷ் மீனா’ திரைப்படத்தில், சிவாஜி கணேசனுடன் இணைந்து அற்புதமான நகைச்சுவை கதாபாத்திரத்தினை ஏற்று நடித்த இவர், அத்திரைப்படத்தில் இன்னொரு கதாநாயகனாகவே நடித்து அனைவரையும் சிரிக்கவைத்தார் என்றுதான் கூறவேண்டும். மேலும் ‘புதையல்’, ‘சகோதரி’, ‘நாடோடி மன்னன்’, ‘குலேபகாவலி’, ‘நீதி’, ‘ராஜா’, ‘பாதகாணிக்கை’, ‘நாடோடி மன்னன்’, ‘கவலை இல்லாத மனிதன்’, ‘அடிமைப்பெண்’ போன்றவை இவர் நடித்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கவையாகும்.
குறுகிய காலத்திற்குள் பல திரைப்படங்களில் நடித்து, நகைச்சுவை நடிப்பில் சிறந்த நாயகனாகத் திகழ்ந்த அவர், அப்பொழுதே ‘1 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் அளவுக்கு மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.
தமிழ் திரையுலக ரசிகர்களில், ‘சந்திரபாபு என்னும் கலைஞனை ரசிக்காதவர்கள் எவரும் இல்லை’ என்னும் அளவிற்கு ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பாடகராகவும் தமிழ் திரைப்படத்துறையில் கொடிகட்டிப் பறந்தார்.
‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘பிறக்கும் போது அழுகிறான்’, ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’, ‘ஒண்ணுமே புரியல உலகத்தில’, ‘பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’, ‘என்னை தெரியலையா இன்னும் புரியலையா’ போன்ற பாடல்கள் 50 ஆண்டுகளையும் கடந்து இன்னும் இசை நெஞ்சங்களின் மனத்தில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது.
இதுவரை, தமிழ் சினிமாவில் பாடக்கூடிய நடிகர்கள் வரிசையில் சந்திரபாபுவிற்கு தனியிடம் உண்டு எனலாம். அதுவும் நகைச்சுவை நடிகர்களில் இவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாகப் பாடக்கூடியவர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம்.
‘கவலை இல்லாத மனிதன்’ மற்றும் ‘குமாரராஜா’ போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்த இவர், 1966 ஆம் ஆண்டு ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்னும் திரைப்படத்தினை இயக்கி, தயாரித்ததோடு மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் நடித்திருப்பார்.
சொந்த வாழ்க்கை:
நகைச்சுவை நடிகராக மற்றவர்களை சந்தோசப் படுத்திய இவரின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகாரமானதாக இல்லை. அவர் திருமணம் செய்துகொண்ட பெண் முதலிரவில் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூறவே, மறுநாள் அவரை மரியாதையுடன் அனுப்பிவைத்தவர். அவருக்குப் பொதுவாகவே தன் நடிப்பின் மீது எப்பொழுதும் ஒரு கர்வம் உண்டு, ஆகையால் ‘நினைத்ததை செயல்படுத்தியே தீருவேன்’ என்ற பிடிவாத குணம் என்பதால் பலரால் திமிர் பிடித்தவன் என்று புரிந்துகொள்ளப்பட்டார். இதனால், சர்ச்சைகளும் சக நடிகர்களுடனான சச்சரவுகளும் அவரைச் சூழ்ந்தே இருந்தன. மேலும் குடிபழக்கம் அதிகம் உள்ளவராகவும், பெத்தடின் என்னும் போதைப்பொருளுக்கு அடிமையானவராகவும் இருந்தார்.
இறப்பு:
சந்திரபாபுவின் இறுதிக்காலத்தில் சோகம் அதிகமாக அதிகமாக, மதுபழக்கமும் அதிகரித்தது. இதனால் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், 1974 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் நாள் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் தன்னுடைய 47 வது வயதில் இறந்தார்.
உண்மையை சொல்லப்போனால், சந்திரபாபுவின் நடிப்பு ஒரு சவால்தான். தனக்கெனத் தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, நடிப்பில் புதுமையை புத்தியவர். தன்னுடைய புதுமையான சிந்தனைகளை, தான் நடிக்கும் படங்களில் கதாபாத்திரமாக வெளிப்படுத்தியவர். சந்திரபாபு என்ற ஒரு கலைஞன் இறந்தாலும், தமிழ் சினிமாவில் அவர் விட்டுச் சென்ற குரல் என்றென்றைக்கும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்பதை யாராலும் மறுக்க இயலாது….
0 comments:
Post a Comment