2013ஆம் வருட டாப் 05 கொரிய படங்கள் | MG SILVERSTAR SIBI VINNARASAN
  • 2013ஆம் வருட டாப் 05 கொரிய படங்கள்

    2013ம் வருட டாப் 05 கொரிய படங்கள்

          தென்கொரியாவில் தயாராகும் படங்கள்தான் இன்று தமிழகத்தில் அதிகம் பார்க்கப்படுகின்றன. கொரிய படங்களை காப்பியடித்து தமிழில் படம் எடுக்கும் போக்கு அதிகரித்து, தற்போது முறையாக அனுமதி வாங்கி படம் எடுக்கிற நிலைக்கு வந்திருக்கிறார்கள். சூது கவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி விரைவில் இயக்கவிருக்கும் எக்ஸ்கிமோ காதல் கொரியாவில் தயாரான மை டியர் டெஸ்பரடோ படத்தின் தழுவல். அப்படத்தின் இயக்குனரிடம் ராயல்டி பணம் தந்து முறையாக ‌ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார்.

            2013ம் வருடம் வெளியான பல கொரிய படங்கள் உலகின் கவனத்தை கவர்ந்தன. அந்தப் படங்களின் டாப் 05 பட்டியலைப் பார்க்கலாம்.

    05. த பெர்லின் ஃபைல்:
       Ryu Seung-wan இயக்கிய இப்படம் ஜெர்மனியில் படமாக்கப்பட்டது. இதுவொரு ஸ்பை த்ரில்லர். வடகொரிய ரகசிய ஏஜென்ட் ரஷ்யாவைச் சேர்ந்த புரோக்கருடன் நடத்தும் சட்ட விரோதமான ஆயுத பேரம் பிரச்சனையில் முடிகிறது.


         வடகொரிய ஏஜென்ட் திட்டமிட்டே அந்த சதியில் சிக்க வைக்கப்படுகிறார். அது ஏன் என்ற கேள்வியுடன் தொடங்கும் படம் இரண்டு மணி நேரம் பார்வையாளர்களை சீட் நுனியில் கட்டிப் போடுகிறது. கொரியாவில் இப்படம் 4.5 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

    04. சீக்ரெட்லி கிரேட்லி:
          இதுவும் ஒரு ஸ்பை த்ரில்லர்தான். வடகொரியாவில் பயிற்சி அளிக்கப்படும் உளவாளிகள் சிலர் தென்கொரியாவில் பல்வேறு பணிகளில் அமர்த்தப்படுகிறார்கள். கொஞ்ச நாளில் தங்கள் வேலையோடும், ஊரோடும் ஒன்றிப் போகும் அவர்களுக்கு திடுமென வரும் உத்தரவு அவர்களின் வாழ்க்கையை மாற்றிப் போடுகிறது.


          இந்தப் படத்தை இயக்கியிருக்கும் Jang Cheol-soo இதற்கு முன் ஒரேயொரு படத்தை மட்டுமே இயக்கியுள்ளார். இந்தப் படமும் 46 மில்லியன்களை தாண்டி வசூலித்துள்ளது.

    03. ஃபேஸ் ரீடர்:
           சென்ற வருடம் வெளியான கொரிய படங்களில் இது வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படம். படத்தின் நாயகன் முகத்தைப் பார்த்து மனிதர்களை துல்லியமாக எடை போடக் கூடியவர். ஒரு கொலை வழக்கில் யார் குற்றவாளி என்பதை கண்டு பிடிக்கிறார். தொடர்ந்து அந்த நாட்டு மன்னர் தனது எதிரிகளை அடையாளம் காண நாயகனை பயன்படுத்துகிறார். இது பெரிய சிக்கலுக்கு அவரை அழைத்துச் செல்கிறது.


            62.5 மில்லியன் டாலர்களை இப்படம் சென்ற வருடம் வசூலித்தது. படத்தை இயக்கியவர் இதற்கு முன் மூன்று படங்களை இயக்கிய Han Jae-rim. இந்தப் படமே அவரை சிறந்த இயக்குனராக அடையாளப்படுத்தியுள்ளது.

    02. மிர்ரகிள் இன் செல் நம்பர் 7:
           சென்ற வருடம் 86 மில்லியன்களைத் தாண்டி அதிகம் வசூலித்த படம். இயக்கியவர் Lee Hwang-kyung. படத்தின் நாயகனுக்கு ஆறு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். ஆனால் அவரது மூளை வளர்ச்சி அவரின் குழந்தை அளவுக்கே உள்ளது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஒரு சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் நாயகன் மாட்டிக் கொள்கிறார். மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கு அவர் அனுப்பப்பட அவரது குழந்தை, குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்ப்படுகிறாள்.


        நம்ம தெய்வத்திருமகள் சாயலில் இருந்தாலும் அந்த சிறை படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்ற வருடம் கொரியாவில் கொண்டாடப்பட்ட படம்.

    01. ஸ்னோபியர்சர்:
            உலகம் கொண்டாடும் கொரிய படங்களில் பலவற்றை இயக்கியவர், Bong Joon Ho. இவரின் பார்க்கிங் டாக்ஸ் நெவர் பைட், மதர், த ஹேnஸ்ட், மெமரிஸ் ஆஃப் மர்டர் ஆகியவை தமிழக ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டவை. இந்தப் படத்தை குறித்த விரிவான கட்டுரையை நமது தளத்தில் உலக சினிமா பகுதியில் காணலாம்.


            கொரியாவில் 63 மில்லியன்களை தாண்டி வசூலித்த இப்படம் விரைவில் அமெரிக்காவில் வெளியாகப் போகிறது. யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் கலக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை.

            இவை தவிர ஹைட் அண்ட் சீக் (இயக்குனர் Bong Joon Ho), த டெரர், லைவ் (இயக்குனர் Kim Byeong U), கோல்ட் ஐ (இயக்குனர்கள் Cho Ui Seok, Kim Byung Seo) ஆகிய படங்களும் சென்ற வருட கொரிய பாக்ஸ் ஆபிஸை கலகலக்க வைத்தன.

        இவை கமர்ஷியலாக வெற்றி பெற்ற படங்களின் பட்டியல். கலைப்பட விரும்பிகள் வேறு பட்டியல் வைத்திருக்கிறார்கள். அவற்றில் Han Gong-ju, The Fake, Our Sunhi, Pascha, Non Fiction Diary, Koala, New World, The Attorney, Manshin: Ten Thousands Spirits... ஆகியவை முக்கியமானவை. நியூ வேர்ல்ட் படத்தை குறித்த விரிவான கட்டுரையும் நமது தளத்தில் உள்ளது.

         இவற்றில் எந்தப் படத்தின் டிவிடியைப் பார்த்தாலும் விடாதீர்கள். ஒவ்வொன்றும் காசு கொடுத்து பார்க்க தகுதியானவை....


0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Sign Out