‘சீயான் விக்ரம்’ என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர், நடிகர் விக்ரம் அவர்கள். நடிப்பில் எந்தவொரு முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் 1990 ஆம் ஆண்டில் கால்பதித்த அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.
‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’, ‘6 முறை ஃபிலிம்ஃபேர் விருது’, ‘தமிழ்நாடு மாநிலப் திரைப்பட விருது’, ‘3 முறை விஜய் விருது’, சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, ‘அம்ரிதா பட விருது’, ‘சர்வதேச தமிழ்ப் பட விருது’, ‘விகடன் விருது’ எனப் பல்வேறு விருதுகளை வென்று, ‘பீப்புள்’ஸ் யுனிவெர்சிட்டி ஆஃப் மிலன்’ல் இருந்து ‘கௌரவ டாக்டர் பட்டத்தையும்’ வென்றார்.
ஒரு நடிகராகத் திரையுலகில் நுழைந்த அவர், பின்னணிப் பாடகராகவும், டப்பிங் கலைஞராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். மக்களின் நலனுக்காகப் பல சமூக நலத் தொண்டுகளைத் தனது ரசிகர் மன்றம் மூலமாக செய்து வரும் அவர், ‘சஞ்சீவனி டிரஸ்ட்’ மற்றும் ‘வித்யா சுதா’ ஆகிய பொதுநல நிறுவனங்களின் விளம்பரத் தூதராகவும் இருந்து வருகிறார். இத்தகைய சிறப்புமிக்க நடிகர் ‘சீயான்’ விக்ரம் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர் ஆற்றிய பங்களிப்பையும், சாதனைகளையும் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஏப்ரல் 17, 1966
பிறப்பிடம்: பரமக்குடி, தமிழ்நாடு, இந்தியா
பணி: நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பின்னணிக் குரல் நடிகர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு:
தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் பரமக்குடியில் கிறஸ்துவ தந்தையான வினோத் ராஜுக்கும், இந்து தாயான ராஜேஸ்வரிக்கும் மகனாக ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, 1966 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விக்ரம் கென்னெடி வினோத் ராஜ் என்பதாகும். இவருடைய அம்மா, ஒரு சப்-கலெக்டர் மற்றும் புகழ்பெற்ற நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் அவர்களின் சகோதரியும் கூட. அவரது மகனான நடிகர் பிரசாந்த், விக்ரமின் நெருங்கிய உறவினராவார். இவருக்கு அனிதா என்ற சகோதரியும், அரவிந்த் என்ற சகோதரனும் உள்ளனர்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்:
சேலம் அருகேயுள்ள மலைப்பிரதேசமான ஏற்காட்டிலுள்ள மாண்ட்ஃபோர்ட் பள்ளியில், தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். பள்ளியில் பயிலும் போதே, அவர், கராத்தே, நீச்சல் போன்ற பல அற்புதக் கலைகளைக் கற்றுத் தேர்ந்தார். தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், திரையுலகில் கால் பதிக்க எண்ணினார். ஏனென்றால், தன்னுடைய தந்தையான வினோத் ராஜ் அவர்கள், சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆர்வத்துடன் தனது சொந்த ஊரானப் பரமக்குடியை விட்டு, வாய்ப்புகள் தேடி சென்னைக்கு ஓடி வந்தார். ஆனால், அவருக்கு துணைக் கதாபாத்திரங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களில் மட்டுமே நடிக்க வாய்ப்புகள் கிடைத்ததால், அவர் மனமுடைந்து போனார்.
இதுவே, விக்ரமுக்குள் ஒரு வெறியைத் தூண்டியது. தனது தந்தை அடைய நினைத்த லட்சியத்தை, தான் அடைந்து அவருக்குப் பெருமை சேர்க்க வேண்டுமென்று உறுதியெடுத்தார். ஆனால், அவரது விருப்பத்திற்கு, அவரது தந்தையே தடையா இருந்தார். தான் சந்தித்தத் தோல்வியைத் தனது மகனும் சந்திக்கக் கூடாது என்று கருதிய அவர், அவரைக் கல்லூரியில் சேர்த்து விட்டார். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில், ஆங்கிலத்தில் தனது இளங்கலைப் பட்டத்தை 1983ஆம் ஆண்டில் பெற்றார்.
அதன் பின்னர், தனது தந்தையின் விருப்பத்திற்கிணங்க, மீன்டும் லயோலா கல்லூரியில் எம்.பி.ஏ சேர்ந்தார். ஆனால், விதி வேறு விதமாக விளையாடியது. கல்லூரிக்குத் தனது இரு சக்கர மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவர், விபத்தில் சிக்கி, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தனது கால் செயலிழந்து விட கூடாது என்பதால், 23 அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், மூன்றாண்டுகள் படுக்கையிலே இருந்தார்.
திரையுலகப் பிரவேசம்:
லயோலா கல்லூரியில் தனது முதுகலைப் பட்டத்தில் படித்துக் கொண்டிருக்கும் போதே, சில விளம்பரங்களில் நடித்து வந்த அவரை, இயக்குனர் சி. வி. ஸ்ரீதர் அவர்கள், அவரது அடுத்தப் படமான ‘என் காதல் கண்மணி’ என்ற படத்தில் நடிக்க 1984 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்தார். அதற்குள், அவருக்கு நடந்த விபத்தினால், அதில் நடிக்க முடியாவிட்டாலும், அதிலிருந்து தேர்ந்து வந்தவுடன் ஷூட்டிங்கை வைத்துக் கொள்ளலாம் என ஸ்ரீதர் சொன்னதையடுத்து, வெகு விரைவிலே தேர்ந்து வந்த அவர், அப்படத்தை முடித்துக் கொடுத்தார். மேலும், அப்படம் 1990 ஆம் ஆண்டில் வெளியானது.
திரையுலக வாழ்க்கை:
விக்ரம் அவர்களைத் தமிழ்த் திரையுலகில் அறிமுகம் செய்த ஸ்ரீதர் அவர்கள், அவருக்கு இரண்டாவது பட வாய்ப்பையும் தந்தார். 1991ல் ‘தந்து விட்டேன் என்னை’ படத்தில் நடித்த அவருக்கு, எஸ். பி. முத்துராமன் அவர்களின் படமான ‘காவல் கீதம்’ (1992) மற்றும் பி. சி. ஸ்ரீராம் அவர்களின் படமான ‘மீரா’ (1992) போன்ற படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அதன் பின்னர், இரண்டாண்டுகள் தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் பிஸியாக இருந்த அவர், 1994 ஆம் ஆண்டில் ‘புதிய மன்னர்கள்’ என்ற படம் மூலமாக மீண்டும் தமிழுக்கு வந்தார்.
அப்படம், எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், மீண்டும் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தொடர்ந்து நடித்த அவர், 1997 ஆம் ஆண்டில், அமிதாப் பச்சன் அவர்களின் தயாரிப்பில் உருவான ‘உல்லாசம்’ என்ற படத்தில், அஜீத்குமாருடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர், அவர், ‘கண்களின் வார்த்தைகள்’ (1998), ‘ஹௌஸ்ஃபுல்’ (1999), ‘சேது’ (1999), ‘சிறகுகள்’ (2௦௦௦), ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ (2௦௦1), ‘தில்’ (2௦௦1), ‘காசி’ (2௦௦1), ‘ஜெமினி’ (2௦௦2), ‘சாமுராய்’ (2௦௦2), ‘கிங்’ (2௦௦2), ‘காதல் சடுகுடு’ (2௦௦3), சாமி’ (2௦௦3), ‘பிதாமகன்’ (2௦௦3), ‘அருள்’ (2004), ‘அந்நியன்’ (2005), ‘மஜா’ (2005), ‘பீமா’ (2008), ‘கந்தசாமி’ (2௦௦9), ‘ராவணன்’, (2010), ‘தெய்வத் திருமகள்’ (2011), ‘ராஜபாட்டை’ (2011), ‘தாண்டவம்’ (2012), ‘டேவிட்’ (2013) போன்ற பல படங்களில் நடித்து, தமிழ்த் திரையுலகில் தனக்கெனத் தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
அவர் நடித்த பிற மொழித் திரைப்படங்கள்:
தமிழ்த் திரையுலகில் அறிமுகமானாலும், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிளும்தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பிற மொழிகளில்
நடித்த படங்களின் பட்டியல்:
ஹிந்தி – ‘ராவன்’ (2010), ‘டேவிட்’ (2013), மலையாளம் – ‘துருவம்’ (1993), ‘மாபியா’ (1993), ‘சைன்யம்’ (1994), ‘ஸ்ட்ரீட்’ (1995), ‘மயூர ந்ரிடம்’ (1996), ‘இந்திரப்ரச்தம்’ (1996), ‘ராசபுத்திரன்’ (1996), ‘இது ஒரு சிநேஹகதா’ (1997), ‘ரெட் இந்தியன்ஸ்’ (2000), ‘இந்த்ரியம்’ (2001).
தெலுங்கு – ‘சிருன்னவுலா வரமிஸ்தாவா’ (1993), ‘பங்காரு குடும்பம்’ (1994), ‘அடால மஜாக்கா’ (1995), ‘அக்கா பாகுன்னாவா’ (1996), ‘குரல்ல ராஜ்ஜியம்’ (1997), ‘9 நேலாலு’ (2001), ‘யூத்’ (2001).
பிறப் பணிகள்:
2௦௦௦ ஆம் ஆண்டில், நடிகை மீனாவுடன் இணைந்து ஒரு பாப் ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். இதில், அவரும் மீனாவும் இணைந்து பாடியிருப்பர். இதைத் தொடர்ந்து, ‘ஸ்ரீ’, ‘ஜெமினி’, ‘கந்தசாமி’, ‘மதராசப்பட்டினம்’, ‘மள்ளனா’, ‘தெய்வத் திருமகள்’, ‘நன்னா’, ‘ராஜபாட்டை’, ‘வீடிந்தே’, ‘டேவிட்’ ஆகிய படங்களில் அவர் ஒரு சில பாடல்களுக்குப் பின்னணிப் பாடியுள்ளார்.
நடிகர் விக்ரம் அவர்கள், ‘அமராவதி’ (1993) படத்தில் அஜித்குமாருக்கும், ‘காதலன்’ (1994) படத்தில் பிரவுதேவாவிற்கும், ‘குருதிப்புனல்’ (1995) படத்தில் ஜானுக்கும், ‘மின்சாரக் கனவு’ (1997) படத்தில் பிரவுதேவாவிற்கும் மற்றும் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ (2௦௦௦0 படத்தில் அப்பாஸிற்கும் பின்னணிக் குரல் பேசியுள்ளார்.
‘ரீல் லைஃப் இன்டர்நேஷனல்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கிய அவர், அந்நிறுவனத்தில் இரு மொழிப் படமான ‘டேவிட்’ என்ற படத்தைத் தயாரித்தார். மேலும், அவர், ‘மஜா’ படத்தில் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
பொது சேவை:
சஞ்சீவனி டிரஸ்ட்டின் விளம்பரத் தூதராக இருந்து வரும் அவர், தனது ரசிகர் மன்றம் மூலமாக ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி, ஏழை மக்களுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை, இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி எனப் பல்வேறு சமூக நலத் தொண்டுகளை செய்து வருகிறார். தனது ஒவ்வொரு பிறந்த தினத்தன்றும் கண்தான முகாம் அமைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவர், ‘கற்க கசடற’ மற்றும் ‘பச்சைப் புரட்சி’ என்ற இரு சமூகநலத் திட்டங்களை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளார்.
இல்லற வாழ்க்கை:
நடிகர் விக்ரம் அவர்கள், கேரளாவைச் சேர்ந்த சைலஜா பாலக்ருஷ்ணன் என்பவரை குருவாயூரில் மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும், அக்ஷிதா என்ற மகளும், த்ருவ் என்ற மகனும் உள்ளனர்.
விருதுகள்:
2003 – ‘பிதாமகன்’ திரைப்படத்தின் சிறந்த நடிகருக்கான ‘தேசிய விருதை’ வென்றார்.
2011 – ‘தெய்வத் திருமகள்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பிற்காக, சிறந்த நடிகருக்கான ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ வழங்கப்பட்டது.
2011 – ‘கௌரவ டாக்டர் பட்டத்தை’ ‘பீப்புள்’ஸ் யுனிவெர்சிட்டி ஆஃப் மிலன்’ அவருக்கு வழங்கி கௌரவித்தது.
தமிழ்நாடு மாநிலப் திரைப்பட விருதுகளான ‘சிவாஜி கணேசன் விருதை’ 2௦௦6 ஆம் ஆண்டிலும், ‘சேது’ படத்திற்காக ‘ஸ்பெஷல் ஜூரி விருதை’ 1999 ஆம் ஆண்டிலும், ‘பிதாமகன்’ படத்திற்காக ‘சிறந்த நடிகருக்கான விருதை’ 2003 ஆம் ஆண்டிலும் வென்றார்.
ஃபிலிம்ஃபேர் விருதுகளை ‘சேது’ (1999) திரைப்படத்திகாக ‘ஸ்பெஷல் விருதையும்’, ‘காசி’ (2௦௦1), ‘பிதாமகன்’ (2௦௦3), ‘சாமி’ (2௦௦3), ‘அந்நியன்’ (2௦௦5), ‘ராவணன்’ (2௦1௦), மற்றும் ‘தெய்வத் திருமகள்’ (2௦11) திரைப்படங்களுக்கான சிறந்த நடிகருக்காகவும் பெற்றார்.
விஜய் விருதுகளை 2௦௦6 ஆம் ஆண்டில் ‘ஐகான் ஆஃப் தி இயர்’ என்றும், 2௦1௦ மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் சிறந்த நடிகருக்காக ‘ராவணன்’ மற்றும் ‘தெய்வத் திருமகள்’ திரைப்படத்திற்காகவும் வழங்கப்பட்டது.
சிறந்த நடிகருக்கான ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதை’ 2001ல் ‘காசி’ படத்திற்காகவும், ‘சர்வதேச தமிழ்ப் பட விருதை’ 2௦௦2ல் ‘ஜெமினி’ படத்திற்காகவும், ‘அம்ரிதா பட விருதை’ 2010ல் ‘ராவணன்’ படத்திற்காகவும், ‘விகடன் விருதை’ 2011ல் ‘தெய்வத் திருமகள்’ படத்திற்காகவும் வென்றார்….
0 comments:
Post a Comment