இப்போதெல்லாம் தீபாவளியன்று - பிரபலங்களின் ஒன்றிரண்டு படங்கள் வருவதே அரிதாக உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் வரை குறைந்த பட்சம் அரை டஜன் படங்களாவது தீபாவளியன்று வெளியாகும். பிரபலங்கள் தீபாவளிக்கு தங்கள் படங்கள் அவசியம் வெளியிட்டே ஆக வேண்டும் என்று நினைப்பார்கள். 89ம் வருஷம் பத்து படங்கள் தீபாவளிக்கு வந்தன. அதில் எட்டு படங்கள் இசைஞானியின் இசையில் வந்தவை. அதில் ஆறு ஹிட் ரகம்.
மாறுதலான ஒரு இசை பதிவை தர நினைத்தப்போது ஒரு யோசனை தோன்றியது. ஒரு இசையமைப்பாளர், இசையமைத்து ஓரே நாளில் வந்த அத்தனை படங்களின் பாடல்களையும், அப்படங்கள் குறித்த ஞாபகங்களோடு பகிர தோன்றியது. அதற்காக 1989ம் வருஷ தீபாவளி நாளை எடுத்து கொண்டேன். இசைஞானி எட்டு படங்கள் இசையமைத்தது ஒரு காரணம் என்றாலும் - எல்லா பிரபல நட்சத்திரங்களும் அந்த படங்களில் இருந்தார்கள் என்பதும் ஒரு காரணம்.
அத்தோடு இன்னொன்றாய் - அதில் இசைஞானியின் உழைப்பும் புரியும். ஒரு நாளில் வெளிவரும் எட்டு படங்களுக்கு ஒருவர் இசையமைக்கிறார் என்றால் - பின்னணி இசை சேர்ப்புக்காக, அவர் பகல் இரவு பாராமல் பணி புரிந்திருக்க வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வு இல்லையென்றால் - அந்த பணி எளிதல்ல. தையலகத்தில் பணிபுரிபவர்கள் - பண்டிகை தினமென்றால், பல நாட்களுக்கு ஓய்வில்லாத வேலை இருப்பார்கள். "வேலை இல்லாத நாளில் வேலையே இல்லையே" என்று வருந்தும் மனது - வேலை மலையாய் கண் முன் குவிந்திருக்கும் போது - தன்னை வருத்தி கொண்டு வேலை பார்க்கும்.
ஆனால் அது ஒரு சுகம். இசைஞானியும் அவ்வண்ணமே பணி புரிந்திருக்க வேண்டும். இனி படங்களும், பாடல்களும்...
1. புதுப்புது அர்த்தங்கள். இசைஞானியும், கே.பாலசந்தரும் இறுதியாக இணைந்து பணியாற்றிய படம். இவர்கள் இணைந்து பணிபுரிந்த ஐந்து படங்களும் - சிந்து பைரவி, புன்னகை மன்னன், மனதில் உறுதி வேண்டும், உன்னால் முடியும் தம்பி, புதுப்புது அர்த்தங்கள் என ஐந்தும் நூறு நாள் படங்கள். இவர்களின் பிரிவிற்கான காரணத்தை சமீபத்தில் தான் இசைஞானி சொல்ல கேட்டேன். வருத்தம் தரும் பிரிவு. இந்த படத்திற்கு பிறகு - பழைய கே.பாலசந்தரை பார்க்க இயலவில்லை. நிச்சயம் இவர்களின் பிரிவு எம்மை போன்ற ரசிகர்களுக்கு இழப்பு தான். மறக்க முடியாத, ஏற்கனவே ஆயிரம் முறை கேட்ட பாடலை - ஆயிரத்தி ஓராவது முறை கேளுங்கள்.
2. கலைஞானி கமல் மற்றும் பிரபு நடித்த வெற்றி விழா இதே நாளில் தான் வெளியானது. பிரதாப் போத்தன் இயக்கம். படத்தின் எல்லா பாடல்களும் ஹிட். கமல் மற்றும் அமலாவின் காதல் காட்சி - இந்த பாடலை கேட்டால் கண் முன் ஓடும். இசைஞானியை ரசிப்பதற்கான காரணமும் புரியும்.
3. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த மாப்பிள்ளை. தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த தமிழ் ரீமேக். சிரஞ்சீவியின் தயாரிப்பில் வெளிவந்தது. ரஜினிக்கு மிக பெரிய ஹிட் படம். இந்த பாடலை வெகு காலம் கழித்து கேட்டேன். இந்த தலைமுறை அதிகம் கேட்டிருக்க வாய்ப்பில்லாத பாடல். கேட்டு மகிழுங்கள்.
4. மக்கள் நாயகன் ராமராஜனின் "தங்கமான ராசா" கரகாட்டக்காரனின் சூப்பர் டூப்பர் ஹிட்டிற்கு பிறகு வந்த படம். இதுவும் வெற்றி தான். ராமராஜனின் வெற்றியில் இசைஞானியின் பங்கு அளப்பறியது. இந்த கிராமிய பாடலை கேளுங்கள்.
5. சத்யராஜ் நடித்த "வாத்தியார் வீட்டு பிள்ளை". எம்.ஜி.ஆரின் எங்க வீட்டுப் பிள்ளை டைட்டிலை மனதில் கொண்டு வாத்தியார் வீட்டுப்பிள்ளை என்று பெயர் வைத்தார்கள். பி.வாசு இயக்கத்தில், சத்யராஜ்க்கு ஜோடி சோபனா. பெரிய வெற்றி பெறாத படம். இது சத்யராஜின் நூறாவது திரைப்படம். இளையராஜா நல்ல பாடல்களை கொடுத்திருந்தார். மனோ பாடிய பாடலை கேளுங்கள். சத்யராஜ் நடித்த "திராவிடன்" படமும் இதே நாளில் வெளியானது. அதற்கு இசை : M.S.விஸ்வநாதன்.
6. கேப்டன் இல்லாமல் தீபாவளி ரேஸா. தர்மம் வெல்லும் என்கிற சுமாரான படம் இந்த பட்டியலில். கீதாஞ்சலி படத்தை இயக்கிய கே.ரங்கராஜ் இயக்கிய படம். ஒரு அருமையான, மென்மையான ஜோடி பாடல். கேட்டு பாருங்கள். இதே நாளில் விஜய்காந்த் நடித்து வந்த மற்றுமொரு படம். "ராஜநடை" அந்த படத்துக்கு, இசை : M.S.விஸ்வநாதன்.
7. மக்கள் நாயகன் கிராமராஜன் நடித்த இரண்டு படங்களும் - இந்த நாளில் ரீலிசானது. அவரது சொந்த தயாரிப்பான "அன்புக்கட்டளை" எனும் படம். மனோ பாடிய ஒரு அருமையான பாடல். இசைஞானி பாரபட்சம் பார்க்காமல் எல்லோருக்கும் சிறப்பாகவே அடித்திருந்தார்.
8. கலைஞரின் குடும்ப நிறுவனமான பூம்புகார் புரெடக்ஷ்ன்ஸ் சார்பில் வந்த பாசமழை எனும் படம். நடிகர்கள், இயக்குனர் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை. இசை - இசைஞானி.
வரும் தினங்களில் இசைஞானி - தீபாவளி நாள் படங்களில் செய்த இசை சாகசங்கள் தொடர்ந்து வரும். இசைஞானியின் இசை பயணம் சாதனைகள் நிரம்பியது. அள்ள அள்ள குறையாத ஞாபகங்களை உள்ளடக்கியது அல்லவா …..
0 comments:
Post a Comment